பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 279


முடியாத சராசரி மனிதர்கள் 'நகை' செய்தார்கள். வீடு எய்துவதற்குரிய முதற்படி புற, அகத் துறவுகளாகும். அமைச்சர் கோலத்தில் வந்த வாதவூரர் திருவடி தீட்சை பெற்றபின் அகத்துறவை உடனே பெற்றுவிட்டார். ஆனால், இதனை யாரும் அறிந்திலர் அமைச்சர் பதவியை விட்டுவிட்டதும் அந்தப் பதவிக்குரிய ஆபரணங்களைத் துறந்துவிட்டதும் அடுத்து நிகழ்ந்த புறத்துறவாகும்.

அடிகளாரின் அகத்துறைவை அறியமாட்டாத மக்கள், புறத்துறவைமட்டும் கண்டுவிட்டு, பெரும் பதவியையும், உயர்ந்த ஆடை ஆபரணங்களையும் துறந்துவிட்ட ஒருவரைப் பார்த்து, பித்தன் என்று கூறி நகையாடினர்.

விடு எய்துவதற்கு உரிய நிலை படிப்படியாக இவர் உள்ளே நிகழ, அதன் பயனாக விளைந்தது புறத்துறவாகும். மக்கள் நகைத்தார்கள். ஆதலின் 'நகை செய்ய' என்றும் அதே நேரத்தில், அகத்துறவு காரணமாக ‘வீடு எய்த’ என்றும் கூறினார்.

நாட்டார் நகை செய்வதற்குரிய காரணம் நன்கு விளங்கிவிட்டது. வீடு எய்துவதற்கு உரிய படிகள் எவ்வாறு தோன்றின என்பதை முற்பகுதியில் விளக்குகின்றார்.

‘காட்டாதன எல்லாம் காட்டி'னான் என்பது முதற்படியாகும். உலகியல் நிலையில் காணும்பொழுது அந்த மன வளர்ச்சிக்கு ஏற்ப, உலகிடைக் காணப்பெறும் பொருள்கள் பல்வேறு வடிவினவாய்ப் பல்வேறு பெயர் உடையனவாய் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காட்சியளிக்கும்.

அருள் பெற்று, வளர்ச்சி அடையும்போது இப்பொருள்களின் மாறுபாடுகள் மறைந்து, இவற்றின் ஊடே இலங்கும் மூலப்பொருள் ஒன்றே என்பது தெரியத் தொடங்கும். 'பார்க்கின்ற மலருடு நீயே இருத்தி’ என்பது