பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


மணிவாசகரைப் பொறுத்தமட்டில் திருப்பெருந்துறையில் குருவடிவம் தாங்கிநின்று வழியோடு செல்பவரை வலிதில் அழைத்து, திருவடியாகிய வீடுபேற்றை ஒரே கணத்தில் தந்துவிட்டான்.

இந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகள் மிக முக்கியமான செய்தி ஒன்றைத் தெரிவிக்கின்றன என்பதைக் கூர்ந்து சிந்தித்தல் வேண்டும். மாறுபட்ட புறச்செயல்கள் ஒன்றும் இல்லாமல் உலகியலோடு இயைந்த வாழ்வு வாழ்ந்த இவர்களுக்கு, இந்தப் பிறப்பிலேயே இறைவனைக் காணும் பேறும் கிடைத்தது; வீடும் கிடைத்தது.

துறவு பூண்டு தவம் மேற்கொண்டு பல்லாண்டுகள் தவம் செய்வார்க்கும் இச்சிறப்புக் கிடைக்கவில்லை; ஆனால், இவர்களுக்குக் கிடைத்தது. இதற்குரிய காரணம் யாது?

தேவர்களும் முனிவர்களும் நனி வாட, இவர்களுக்கு மட்டும் அந்தத் தனிச்சிறப்புக் கிடைத்தது என்றால், அதற்கு ஒரேயொரு காரணந்தான் உண்டு. அது என்ன என்பதைத்தான் இப்பாடலின் முதலடி இரத்தினச் சுருக்கமாக வெளியிடுகின்றது.

'ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை’ என்பது அந்த அடியாகும். ஓயாதே உள்குவார் என்ற இரண்டு சொற்களும் நன்கு தெரிந்த சொற்கள் போலக் காணப்பட்டாலும் ஆழமான பொருளுடையவை என்பதை மறுத்தற்கில்லை. ஓயாது என்றால் ஒரு விநாடியும் இடை விடாமல் என்பது பொருளாகும். உள்குதல் என்பது மனத்தில் நினைப்பது அன்று; மனத்தையும் தாண்டி, மேல் சித்தத்தையும் கடந்து அடிச்சித்தத்தில் நினைத்தலையே உள்குதல் என்ற சொல் குறிக்கும். உள்குதல் என்ற சொல்லின் முற்பகுதி உள் என்பதாகும். எனவே புறமனம், ஆழ்மனம், சித்தம் என்ற வரிசையில்