பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 285


உள்ளே உள்ளே சென்று தொழிற்படுவதைத்தான் உள்குதல் என்ற சொல்லால் அடிகளார் குறிப்பிடுகின்றார். இதற்கு ஒரு காரணமும் உண்டு.

மேல்மனத்தின் மேற்பகுதி, அடிப்பகுதி, அகமனத்தின் மேற்பகுதி என்பவற்றில் தோன்றும் எண்ணங்களை அதே இடத்தில் நிலைபெறுமாறு செய்தல் மிகமிகக் கடினமாகும். விரும்பிய பொழுதெல்லாம் இப்பகுதிகளில் ஒரு நினைவை உண்டாக்கலாமேனும் சில விநாடிகளுக்கு மேல் அந்நினைவு நிற்பதில்லை.

மன இயலின் இந்த நுணுக்கத்தை அறிந்த அடிகளார், எண்ணுவார், நினைப்பார், சிந்திப்பார் என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் உள்குவார் என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் கருத்து இதுவேயாகும்.

உள்ளத்தில் தோற்றுவிக்கப்படும் இந்தச் சிந்தனைகூட, மனத்தோடு ஒப்பிடும்போது மிக நீண்டநேரம் நிலைநிற்கும் என்பது தவிர, நிலைபேறாக நின்றுவிடும் என்று சொல்ல முடியாது. அப்படி அது நிற்கவேண்டுமானால் ஒரு விநாடிகூட இடைவிடாமல் இந்த ஆழ்ந்த சிந்தனை உள்ளத்தின் ஆழத்தில் நிலைபெற்றிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது ஒருவருடைய கடமை என்பதைக் கூறவந்த அடிகளார் 'ஓயாதே உள்குவார்’ என்றார்.

இவ்வாறு உள்கினால் கிடைக்கும் பயனை நாம் அறிந்துகொள்வது கடினம். நோய்க்கு வாய்வழியாக உண்ணும் மருந்து குருதியுடன் கலந்து உடல் முழுதும் பரவி நோயைப் போக்குகின்றது என்பது உண்மைதான். ஆனால், அந்த மருந்து உடலின் எப்பகுதியில் உள்ளது, எவ்வாறு பணிபுரிகின்றது, எவ்வாறு நோயைப் போக்கிற்று என்பதை நோயாளி அறிவதில்லை.

அதேபோல ஓயாது உள்குவாருக்கும் ஒரு நிலையான பயன் கிடைக்கின்றது. எல்லோருக்கும் உள்ளே