பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 287


பைனாகுலரைத் திருப்பி வைத்துக்கொண்டு பார்த்தால் ஒரு அடி தூரத்திலுள்ள பொருள்கூட நூறடிக்கு அப்பாலுள்ளது போலக் காட்சியளிக்கும். இதில் காண்பானும், காணப்படு பொருளும் மாறுவதில்லை. இடையிலுள்ள கருவிதான் முன்பின்னாக மாறி நிற்கும். அதேபோல மனிதனும் இறைவனும் அவரவர் இடத்தில்தான் இருக்கின்றனர். ஓயாது உள்குதல் என்ற பைனாக்குலரைப் பயன் படுத்துவோர்களுக்கு முன்னர்த் தூரத்தில் காணப்பட்ட இறைவன் இப்போது நெருங்கி வந்து காட்சியளிக்கிறான். இந்த உள்குதல் ஆகிய செயலை இறைவன் மாட்டுச் செய்யாமல் பிற பொருளின்மேல் செலுத்துவோர்கள் பைனாக்குலரைப் பின்முன்னாக வைத்துப் பார்ப்பவர்கள் ஆவர். இப்படிப்பட்டவர்களுக்கே இறைவன் சேயனாகக் காட்சி அளிக்கிறான். இதனையே அடிகளார் ‘சேயானை’ என்று கூறினார்.

'சேவகன்' என்ற சொல்லுக்கு வீரன் என்பது நேரடியான பொருளாகும். இங்குக் குதிரைச் சேவகனையும் அச்சொல் குறிப்பால் உணர்த்திற்று.

'நாயான நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். மிகவும் வெறுத்து ஒதுக்கத்தகுந்த தம்மையும் ஒரு பொருளாக்கி ஆட்கொண்டான் ஆதலின் அவனைத் தலைவன் என்கிறார்.

'தாயானை தத்துவனை’ என்ற சொற்கள் முரண்பட்ட இரு பொருள்களை உடையன. தாய் என்பவள், குற்றம் குறைகள் காண முற்படாமல், எந்நேரமும் தன் கவனத்தைக் குழந்தைக்குத் தருபவள் ஆதலின், அப்பண்புகள் எல்லாம் ஒருங்கேயுடைய இறைவனைத் தாய் என்றார். இம்மட்டோடு நிறுத்தியிருப்பின் இறைவனின் பெருமையை அறியாமல் தாய் என்ற முறையில் எளிதாகக் கருதிவிடக் கூடும். எனவே,