பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


'தத்துவனை' என்ற சொல்லை அடுத்து வைத்தார். தத்துவம் என்ற சொல் உணர்தற்கு அரிய மெய்ப்பொருள் என்ற கருத்தைத் தருவதாகும்.

பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவன் என்று சொல்வதுதான் மரபு. இவ்வாறு கூறும் பொழுது இப்பொருள்கள் அவனினும் வேறுபட்டவை என்ற கருத்துக்கு இடங்கொடுத்துவிடும். அதனைப் போக்குவதற்கே 'உலகு ஏழும் ஆயானை’ என்கின்றார். ஆயவன் என்றாலே ஆக்கல் தொழிலைச் செய்பவன் என்ற பொருளைத் தராமல் தானே அதுவாக ஆயினவன் என்ற பொருளைத் தந்துநிற்கின்றது. அதுவாக ஆயினவன் என்றால் இவ்வாறு ஆவதற்கு முன்பு ஒரு நிலை உண்டு என்பது பெறப்படுமன்றோ! சோறு ஆயிற்று என்றால் சோறாக ஆகும் நிலைக்கு முன்னர் அரிசி என்ற ஒரு நிலை இருந்தது என்பது பெறப்படும். எனவே, 'ஆயானை’ என்றால் உலகேழும் தன் சொரூபமாக நிற்றலோடு, தனியேயும் உள்ளான் என்ற கருத்தைக் குறிப்பால் உணர்த்திற்று.

'ஆள்வானை' என்றதால் படைத்தல், காத்தல் என்ற இரு தொழிலையும் கூறினாராயிற்று.

அம்மட்டோடு அல்லாமல் ஒரு புதிய கருத்தையும் அடிகளார் இங்குப் பெறவைக்கிறார். ஒருவனே தனியாக நிற்கிறான்; அவனே பிரபஞ்சமாக மாறுகிறான்; அப் பிரபஞ்சத்தை அவனே ஆள்கிறான். தொழில் என்ற முறையில் ஆதல், ஆள்தல் என்பவை வெவ்வேறாகக் காணப்படினும் ஒருவனே தன்னைப் பிரபஞ்சமாகப் படைத்துக்கொண்டு அதை ஆள்பவனாகவும் இருக்கின்றான். இரண்டு தொழில்களைக் கூறியமையின் அருத்தாபத்தியால் மூன்றாவதாகிய அழித்தல் தொழிலும் பெறப்பட்டது என்க.