பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



பாண்டியர், சோழர் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி என்ற சொல் பெரிதும் ஆளப்படுவதை இங்கே சிந்திக்கலாம்.

‘கலிமதுரை' என்பது தொடங்கி, பொன்மேனி என்பதுவரை உள்ள நிகழ்ச்சிகள் அடிகளார் வாழ்க்கையில் அவர் கண் எதிரே நடைபெற்றவையாகும்.

மண்சுமந்தவனுக்கு முதுகில் விழுந்தது ஒரெயொரு அடிதான். பிரம்பால் ஒரு அடி முதுகில் கொடுத்தால், எந்த ஒரு முதுகும் புண்ணாகிவிடாது. அப்படியானால் 'மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனி' என்று பாடுவதன் நோக்கம் என்ன?

குழந்தைக்கு ஒரு சிறு துன்பம் நிகழ்ந்தாலும் அதனைப் பெரிதுபடுத்தி வருந்துவது தாய்இயல்பு. அன்பின் எதிரே சிறியதும், பெரிதாகக் காட்சியளிக்கும். எனவே, சொக்கன் முதுகில் பட்ட ஓரடி, அடிகளார் மனத்தில் பெரும் புண்ணைத் தோற்றுவித்தது. தம் மனத்தில் ஏற்பட்ட புண்ணைச் சொக்கன் முதுகின்மேல் ஏற்றி புண் சுமந்த பொன்மேனி என்று பாடுகிறார். இதனால் அடிகளாரின் அன்பின் எல்லை ஓரளவு உய்த்துணரப்படும்.

அடிகளாருக்கு ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டு வந்த வடலூர் வள்ளற்பெருமான் இந்தக் காட்சியை மனத்திலே கொண்டுவருகிறார். ஆனாலும், ஒருவேறுபாடு உண்டு. சொக்கன் முதுகில் பட்ட அடிக்கு மனம் நொந்தார் அடிகளார். ஆனால், வள்ளலாரைப் பொறுத்தமட்டில் அந்த அடியைக் காட்டிலும் அதைக் கண்டுகொண்டிருந்த மணிவாசகப் பெருமானின் மனம் என்ன பாடுபட்டதோ என்று நோகிறார். அதற்குக் காரணத்தையும் அவரே சொல்கிறார். ஆலவாய்ச் சொக்கனே நீ அடிபட்டாய் என்பதை ஆயிரம் ஆண்டுகள் கழித்து இப்பொழுது காதால் கேட்டவுடனேயே என் நெஞ்சத்தில் இடிவிழுந்தது