பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


185.

செப்பு ஆர் முலை பங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்
அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய் 11

செப்பு-சிமிழ். அப்பு-தண்ணீர் கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார்-கழல்களுக்கே தம்மை அடகாகக் கொடுத்த மனத்தினையுடைய அடியார்கள். அப்பாலைக்கு அப்பாலை-சுத்த மாயாபுவனங்களுக்கு அப்பாற்பட்டவரை.

பிறந்த நாட்டைப்பற்றி வீறு கொள்ளுதலும் அதனைப் புகழ்ந்து பேசுதலும் பழைய இலக்கியங்களில் அதிகம் காணப்படா. மூவர் தேவாரங்கள் அந்தந்த ஊர்களில் பாடப்பெறும்போது அந்த ஊர்களுக்கு உரியவனாகவே இறைவன் பேசப்பெறுவான்.

அடிகளாரைப் பொறுத்தவரை தென்னன் என்றும் தென்பாண்டி நாட்டான் என்றும் பல முறை கூறியுள்ளதைக் காணலாம். சிவனைப் பாண்டி நாட்டுக்கு உரியவன் என்ற கருத்தில் முன்னர்த் 'தென்னாடு உடைய சிவன்' (திருவாச: 4-164) என்று கூறினாரோ என நினைக்கத் தோன்றுகிறது. தமிழகம் முழுவதையும் தென்னாடு என்று தமிழர்கள் குறிப்பதில்லை. தட்சிண தேசம் என்று வடவர்கள் குறிப்பிட்டதற்குக் காரணம், இப்பகுதி இந்தியாவின் தென்பகுதியில் உள்ளது என்பதாகும். வடக்கே உள்ளவர்களுக்கு இது தென்னாடே தவிரத் தமிழரைப் பொறுத்தமட்டில் தென்னாடு என்பது பாண்டி நாடே ஆகும்.

‘தாளடைந்தார் நெஞ்சைத் தப்பாமே உருக்கும் தன்மையினால் என்று கூறியதால் அன்பர் பணி என்ன,