பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 309


இறைப்பிரேமை கொள்பவர்கள் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி இறைவனையே தலைவனாகக் கொண்டு, தம்மை மறந்தும், சில சமயம் சுயநினைவு வரப்பெற்றும், பாடி ஆடுவர்.

அடிகளாரின் இப்பாடலில் இந்நாட்டு மரபைப் பின்பற்றி இறைவன்மாட்டுக் காதல் கொண்டவர் கூற்றாக இதனை அருளிச் செய்கின்றார்.

‘சூடுவேன்’ என்பது முதல் ‘கூடி முயங்கி மயங்கி நின்று’ என்பதுவரை, தம்மை மறந்த நிலையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகளாகும். இப்படி இரண்டறக் கலந்த நிலையிலும் ஒரோவழி தற்போதம் தலைதூக்குகின்றது. அது தலை தூக்கியவுடன், தான் - அவன் என்ற வேறுபாடு தெரியத் தொடங்குகின்றது. எவ்வளவு முயங்கியும், திரள்தோள் சேர்ந்தும் முற்றிலும் தான் அதனுள் கலக்க முடியாமையின், தான் - அவன் என்ற வேறுபாடு தோன்ற, ஊடல் தோன்றுகிறது.

முற்றிலுமாக அவன் (தலைவன்) விருப்பப்படியே விட்டிருந்தால் 'தன்னை மறந்து தன் நாமம் கெட்டு, தலைவன் தாளே தலைப்பட்டு’ (திருமுறை:6-15-7) இருப்பாள். இவ்வாறு இருக்கும் நிலையில், தான் என்ற பொருளே இன்மையின், ஊடலுக்கு அங்கு இடமே இல்லை. இறைப் பிரேமையின் முழு நிலையாகும் அது.

‘ஊடுவேன்’ என்று அடிகளார் கூறுவதால் இரண்டற்ற நிலை நீங்கி இரண்டான நிலை தோன்ற ஊடல் தோன்றிற்று. ஊடலைத் தணிக்க வேண்டியவன் வராவழியும் தலைவியின் உள்ளத்தில், அவன் வந்தால் என்ன செய்யவேண்டும் என்ற கற்பனை விரிகின்றது. அதனையே 'செவ்வாய்க்கு உருகுவேன், உள்ளுருகித் தேடுவேன், தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்’ என்று பாடுகின்றார்.