பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஊடுதலில் இரண்டற்ற நிலை மறைந்து விட்டமையின் செவ்வாய்க்கு உருகத் தொடங்கி, சிவன் கழலே சிந்தித்து மலர்கின்ற நிலை ஏற்படுகிறது.

‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்' என்ற நாவரசர் பெருமானின் பாடலின் (திருமுறை: 6-24-7) பின்னிரண்டு அடிகள் இறைப்பிரேமையின் இரண்டற்ற நிலையை விளக்குவதாகும். அந்த நிலை கைகூடுவதற்கு முன்னர், ஒரு சில நேரம் இரண்டற்ற நிலையும், ஒரு சில நேரம் இரண்டாக உள்ள நிலையும் மாறிமாறித் தோன்றுதலின் அந்த நிலையை விளக்கும் பாடலாகும் இது.

192.
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை
வெளி வந்த மால் அயனும் காண்பு அரிய வித்தகனைத்
தெளி வந்த தேறலைச் சீர் ஆர் பெருந்துறையில்
எளிவந்து இருந்து இரங்கி எண்அரிய இன் அருளால்
ஒளி வந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ
அளி வந்த அந்தணனைப் பாடுதும் காண் அம்மானாய் 18

கேழ்-நிறம். தேறல்-தேன். அளி-கருணை.

கிளிபோன்ற மொழி பேசுபவளும், கிளியின் நிறத்தை ஒத்தவளுமாகிய உமையை தன் உடலின் ஒரு பாதியாக உடையவனும், தேடிக் காண்போமாக என்று கூறிக் கொண்டு புறப்பட்ட மாலுக்கும் அயனுக்கும் ஒளித்து நின்றவனும், தெளிந்த தேன்போன்ற இனியவனும் ஆகிய ஒருவனைப் பாடுதுங்காண் என முடிக்க.

இதுவரை இறைவனுடைய புகழைப் பேசிய அடிகளார், இறப்பு உயர்ந்த அந்தப் பரம்பொருள் திருப்பெருந்துறையில் மானிட வடிவு தாங்கி யாவரும் காண எளிவந்து தமக்கு இன்னருள் புரிந்து என்கிறார்.