பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 317


உலகிடை விட்டுவிட்டுப் போய்விட்டார் குருநாதர் என்ற ஓர் அச்சம் வலுவாகப் பீடித்து நின்றது. மெள்ள மெள்ள அதிர்ச்சி, அச்சம் என்ற இவை இரண்டும் குறையவே, அந்த அனுபவத்தை மீண்டும் நினைந்து, மறுபடியும் அதனுள் புகுந்து, அனுபவித்துவிட்டு, வெளிவந்து, உடனே அதனைப் படம்பிடித்துப் பாடும் பாடல்கள் திருவாசகத்தில் பெரும்பகுதியாய் அமைந்துள்ளன.

இந்த அடிப்படையில் சிந்திக்கும் என் மனத்தில் தோன்றும் முடிவின்படி பார்த்தால் திருச்சதகத்துக்கு முன்னர் நீத்தல் விண்ணப்பம் இடம் பெற்றிருக்கவேண்டும். இவ்விண்ணப்பம் முடியும் தறுவாயில் எழும் இறுதிப் பாடல்களில், ‘என்னை விட்டுவிடாதே’ என்று அஞ்சி வேண்டுவதற்குப் பதிலாக, ஒருவகை மனநிறைவு ஏற்பட்டு இறைவனையே எள்ளி நகையாடும் துணிவு பிறக்கின்றது. ‘என்னைக் கைவிட்டால் உன் மானத்தை வாங்கி விடுவேன்’ என்ற முறையில் அப்பாடல்கள் அமைந்து உள்ளன.

இந்த மனவளர்ச்சிக்குப் பிறகு மனத்தில் ஏற்பட்ட தென்பு காரணமாக ஒரு அமைதி நிலையை அடைகின்றார், அடிகளார். அந்த அமைதியில் பழைய அனுபவம் மெள்ள உள் நுழைகின்றது. வந்த அனுபவத்தை ஓடி விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டுமேயானால் அதற்கு ஒரே வழி திருவடிகளை நோக்கிக் கூப்பிய கைகளைப் பிரிக்காமல் இருப்பதுதான் என்ற எண்ணம் வர, 'கைதான் நெகிழவிடேன்’ என்று பாடத் தொடங்குகிறார்.

சதகம் முழுவதும் பத்துப் பத்துப் பாடல்களாக அமைந்திருப்பினும் ஒவ்வொரு பத்திலும் உணர்ச்சியின் தோற்றம், உச்ச நிலையை நோக்கிச் செல்லுதல், தணிதல் ஆகிய மூன்று நிலைகளும் இடம் பெற்றுள்ளன என்பதைக் கூர்ந்து நோக்கினால், காணமுடியும். இவ்வாறு கூறுவதால் இந்த அளவீடு முற்றிலும் சரியானது, அனைவரும்