பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்தில் இதைச் சொல்லவில்லை.

ஆயிரம் ஆண்டுகளாக ஓலைச்சுவடியிலும் புத்தகத்திலும் அமைந்துள்ள முறையை, மாற்றி வைத்துக் கொண்டால், அடிகளாரின் வாழ்வில் நிகழ்ந்த இறையனுபவ வளர்ச்சியை இந்த அமைப்பு முறை பிரதிபலிக்குமோ என்ற நினைவில் என் சிந்தனைப் போக்கிற்கு இடம் கொடுத்துள்ளேன்.

முதலில் நீத்தல் விண்ணப்பமும் அடுத்துத் திருச்சதகமும் இடம் பெறுவது முறை என்ற சிந்தனைக்குப் பிறகு மிகப் பெரிய வினாவாக நிற்பது முன்னர்ப் பதிப்பிக்கப்பெற்றுள்ள நான்கு அகவல்களைப் பற்றியதே ஆகும். இந்த அகவல்கள் எப்போது பாடப்பெற்றன என்ற வினாவிற்கு விடை காண்டது கடினம். நான்கு அகவல்களிலும் சிவபுராணம் தவிர ஏனைய மூன்றும் ஒரு தனித் தொகுதியாக உள்ளன. இறைவனுடைய பெருமை பற்றியும் உயிர்களின் சிறுமைபற்றியும் இந்த உயிர்கள்மாட்டு இறைவன் கொண்ட கருணைபற்றியும் அமைதியான மனத்துடன் நீண்ட காலம் அடிகளார் சிந்தித்திருக்க வேண்டும். ஒரு தொடர்பும் ஒரு முறையும் இல்லாமல் முன்னும் பின்னுமாய் மனத்தில் தோன்றிய எண்ண ஓட்டங்கள் நீண்டகாலம் நிலைபெற்ற பின்னர், அவை, சித்தத்துள்ளே புகுந்து ஊறிய பின்னர், ஒரு வடிவைப் பெற்றுள்ளன. அந்த வடிவு பெற்ற நிலைதான் கீர்த்தித் திருஅகவல், திருஅண்டப்பகுதி, போற்றித் திருஅகவல் ஆகியவையாம். இவைகளிலும், நடுவில் உள்ள அண்டப்பகுதி, புறநுநிலையில் நின்று (objective outlook) இறைவனைப் பற்றி அடிகளார் கொண்ட சிந்தனையின் முடிவாகும். விரிந்து செல்லும் அண்டமும் சிறியது என்று சொல்லும்படி பெரியதாய் நிற்கும் ஒருவன், சிற்றுயிர்களாகிய பறவை, விலங்குகள், மனிதர்கள் ஆகிய மூவகை