பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 321


‘உரைப்பன் யான்’ என்பதின் பொருள் முடிந்துவிடுகிறது. அதுதவிர, சிவபுராணத்திற்கும் அடிகளாருக்கும் வேறு தொடர்பைக் கற்பிக்கத் தேவையில்லை. சிந்தையுள் ஒருவன் நிரம்பிய பிறகு உரைப்பன் என்ற சொல்லுக்கு நான் என்ற எழுவாயைப் பயன்படுத்தத் தேவையில்லை. 'சிந்தையுள் நின்றவன் என் வாய்மூலம் உரைத்தான்’ என்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

திரு இலம்பையங் கோட்டூர்த் தேவாரத்தில் ‘எனதுரை தனதுரையாக' (திருமுறை 76-6) என்று ஆளுடைய பிள்ளையார் கூறியிருப்பதைக் காண்பது மேலே கூறிய கருத்துக்கு அரண் செய்வதாகும். சிவபுராணம் என்ற பெயருடன் வெளிப்பட்டுள்ள இப்பாடலைப் பொருள் உணர்ந்து படிப்பவர் சிவபுரத்துச் சென்று தங்கியிருப்பர் என்ற முறையில் இந்தப் பகுதி முடிகின்றது. ஆதலின் மேலே கூறிய பொருள் வலுவுடையதாக ஆகின்றது.

இவ்வாறன்றி, ‘உரைப்பன் யான்’ என்பதற்கு அடிகளாரை எழுவாயாக ஆக்கினால், தாம் பாடிய சிவபுராணத்தைப் படிப்பவர் சிவபுரத்தில் சென்று தங்கி இருப்பர் என்று பொருள் கூறிட நேரிடும். அடிகளாரின் வாழ்க்கைமுறை, திருவாசக அமைப்புமுறை ஆகியவற்றை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள்கூட 'யான் உரைத்த சிவபுராணத்தைப் படிப்பவர் சிவபுரத்தில் சென்று தங்கியிருப்பர்’ என்று பொருள் கொள்ளும்படியாக அடிகளார் பாடியிருக்க முடியாது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆளுடைய பிள்ளையார் 'எனதுரை தனதுரை' என்று கூறிவிட்ட காரணத்தால்தான், அவர் பாடல்களைப் படிப்பவர்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே (2: 85-11) பாவம் பறையும்'(1: 52-11) 'பிள்ளையினோடு உள்ளம் நினைவாயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா'(2: 48-2) என்று துணிவோடு பாட முடிந்தது.