பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 325


இவ்வாறு செய்வதால் அப்பாடலின் சிறப்பையும் ஆழத்தையும்மட்டும் அறியலாமேதவிர, அதனை இயற்றியவரின் மனநிலையை, அனுபவத்தை அறிய முடியாமல் போய்விடுகிறது.

இம்முறையில் பாடல்களைப் பார்க்கும்போது தனித்தனிப் பாடலாகத்தான் எடுத்து அதனைச் சிந்திக்கின்றோம். காப்பியப் பாடல்களாக இருப்பின் கதைப்போக்கை அறிந்துகொள்வதற்காகவேனும் முன்னர் வந்த பாடல்களில் நம் சிந்தனையைச் செலுத்துகின்றோம். அன்றியும், இக்காப்பியப் பாடல்கள் கதைத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டமையின் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவே அமைந்திருக்கும்.

ஆனால், பக்தி அடிப்படையில் தோன்றும் தன்னுணர்ச்சிப் பாடல்களில் (subjective poetry) ஒரு பாடலுக்கு அடுத்த பாடல் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்ற இன்றியமையாமை இல்லை. எனவே, படிக்கின்ற நமக்கும் அத்தொடர்பைப்பற்றிச் சிந்திக்கும் வாய்ப்பே தோன்றுவதில்லை. பல சமயங்களில் தனி மரங்களில் சிந்தனையைச் செலுத்தித் தோப்பையே மறந்து விடுகிறோம்.

இக்குறை அல்லாமல் மற்றோர் குறையும் ஏற்படுகிறது. அருட்பாடல்களைப் படிக்கும்போது மரபு என்ற ஒன்று நம் முதுகின்மேல் ஏறிக்கொள்கிறது. அந்த மரபின் அடிப்படையிலேயே பாடல்களைப் படிக்கின்றோம்; பொருள் செய்கின்றோம்; சில சமயங்களில் அனுபவிக்கக் கூடச் செய்கின்றோம்.

உதாரணமாக, திருவாசகத்தில் வரும் திருவெம்பாவை, அம்மானை, பொற்சுண்ணம் போன்ற பகுதிகள் நீண்ட நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் வெவ்வேறு