பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 335


வேண்டும் என்று நினைத்ததாக இப்பாடலில் பேசுகிறார். ‘விடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன் என வரும் தொடரின் பொருள் இதுவேயாகும். விரைகின்றேன்’ என்பது நிகழ்காலத்தைக் குறிக்கும் தன்மை ஒருமை வினை முற்றாகும். ஆனால், இப்பாடல் பாடப்பெறுகின்ற நேரத்தில் இங்குக் கூறப்பெற்ற செயல் எதுவும் நடைபெறவில்லை. சிலகாலம் முன்னர்த் திருப்பெருந்துறையில் நிகழ்ந்த நிகழ்ச்சியே ஆகும் அது.

அந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக மனத்துள் நினைந்துபார்க்கும் அடிகளார், இவ்வாறு கூறுகிறார். இறைவன் இவரை ஆட்கொள்ளும்பொழுது இவர் தம்வசத்தில் இல்லை. அதேபோல அடியார் கூட்டத்தினிடையே அமருமாறு குருநாதர் ஆணையிட்ட பொழுதும் இவர் தம்வசத்தில் இல்லை. இறையதுபவத்தில் முற்றிலுமாக மூழ்கியிருந்தபொழுது நடைபெற்ற செயல்களாகும் இவை. அந்த அநுபவம் நீடிக்கவில்லை; அதன் விளைவாக அடியார் கூட்டத்தினிடையே இருந்த நிலையும் நீடிக்கவில்லை. தம்முடைய நிலைக்கு மீண்டபொழுது நடந்தவற்றை நினைந்து பார்க்கையில், அடிகளார் மனத்தில் புதிதாகத் தோன்றிய எண்ணமாகும் இது.

அமைச்சராக அந்த விநாடிவரை இருந்த தாம், ஒரு விநாடி நேரத்தில், இறையநுபவம், அடியார் கூட்டம் என்ற இரண்டிலும் ஈடுபட்டுப் பின்னர் மீண்டது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நாடகம் என்றே நினைக்கின்றார் அடிகளார். அந்த நாடகத்தில் அடியார்களிடையே இருக்குமாறு தம்மைப் பணித்தவர் நாடகத்தை நடத்தும் குருநாதர் அல்லவா? நாடகத்தின் தலைவராகிய குருநாதர், நாடகம் முடிந்துவிட்டது என்பதை அறிவிப்பதுபோல மறைந்து விட்டார். நாடகம் முடிந்து, தமக்குரிய வேடத்தைக் கலைத்துவிட்டு மறுபடியும் அமைச்சர் பொறுப்பை ஏற்பதை விட்டுவிட்டு, மறுபடியும் நாடகத்தில் வந்த