பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 337


மண்ணாள்வான் மதித்துமிரேன்' என்பது இப்பொழுது கிடைத்துள்ள சுகம், மேலே வரக்கூடிய சுகம் ஆகிய இரண்டையும் குறிக்கின்றது.

இவற்றையெல்லாம் உதறிவிட்டு மிக்க உறுதிப்பாட்டுடன் வீடுபேற்றை நோக்கிச் செல்ல முடிவு செய்துவிட்டமையின் 'விரைகின்றேன்’ என்று நிகழ்காலத்தால் கூறினார்.

முதல் பத்துப் பாடல்களுக்கு மெய்யுணர்தல் என்ற தலைப்புத் தரப்பெற்றுள்ளது. அத்தலைப்பு மிகவும் பொருத்தமானது என்று முன்னர்க் கூறினோம். இரண்டாம் பத்தின் தலைப்பு அறிவுறுத்தல் என்பதாகும். மெய்யை உணர்ந்தபின், அறிவுறுத்தல் வருவதற்கு இடமேது என்ற ஐயம் நியாயமானதே ஆகும்.

மெய்யை உணர்ந்த நிலையில்தான், தாம் இன்னும் அந்த முழுநிலையை அடையவில்லை என்பதை அடிகளார் உணர முடிகின்றது. மெய்யுணர்தலில் முழுத்தன்மை பெற்றிருந்தால் ஏனைய அடியார்களோடு சேர்ந்து வீட்டுலகம் சென்றிருக்கலாம்.

நடைமுறை வேறுவிதமாக உள்ளது. அவர்கள் போய்விட்டார்கள். அடிகளார் தங்கிவிட்டார். சிறிது நேரம் மெய் உணரும் வாய்ப்புத் தமக்குத் தரப்பெற்றது ஒரு நாடகப்பாத்திரத்துக்குரிய வேடமே என்று நினைக்கின்றார்.

ஆனாலும், அந்தச் சிறிதுநேர அனுபவம் அதனை முழுமையாய்ப் பெறவேண்டும் என்று உந்துதலை அவருள் ஏற்படுத்தியது உண்மை. மெய்யுணர்ந்த நிலையில் குருநாதர், குருநாதர் மட்டுமல்ல; 'வானாகி மண்ணாகி... நின்றாயை’ என்றும் உணர்கின்றார். இப்படிப்பட்ட ஒருவரை என்ன சொல்லி வாழ்த்துவது என்று மருள்கின்றார்.