பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பின்னுரை *339

எண்ணங்களிலிருந்து விடுபட்டு நீ அடங்கியிருந்தபொழுது என்ன நிகழ்ந்தது என்பதை இதோ உனக்கு நினைவூட்டுகிறேன். மரத்தடியில் இருந்த குருநாதர் வழியோடு சென்ற நம்மை இழுத்துப் பிடித்து நமக்குள் புகுந்தார். என்ன அற்புதமான அநுபவம் கிடைத்தது தெரியுமா உனக்கு! ஊனெலாம் நின்று உருகிற்று. ஏ நெஞ்சே! நீ அப்படியே ஒழுங்காக இருந்திருந்தால், அந்த அநுபவம் நீடித்திருக்கும். திடீரென்று நீ உன் புத்தியைக் காண்பித்துவிட்டாய். அதன் பயன் என்ன தெரியுமா? நம்முள் புகுந்து, ஊனெலாம் உருக நம்மை ஆண்டவர் இப்பொழுது நம்மை விட்டுவிட்டு வானத்திற்குச் சென்று விட்டார். இனி என்ன செய்வது? இந்த அநுபவம் போனபொழுதே நீயும் செத்து ஒழிந்திருக்க வேண்டும். என்ன வேடிக்கை: ஊனுருகும் நிலை போய்விட்டது; அதனை உருக்கியவர் வானத்திற்குப் போய்விட்டார். செத்து ஒழியாமல் நீமட்டும் வாழ்கின்றாய். நான் என்ன செய்யட்டும்?

இந்த அநுபவப் பிரிவினால் மாண்டிருக்க வேண்டிய நெஞ்சம் மாளாமல் வாழ்கின்றது. ஆதலால், அதன்மாட்டுக் கருணை கொண்ட அடிகளார், அந்த நெஞ்சை நோக்கி இறுதியாக ஓர் அறிவுரை கூறுகிறார். 'நெஞ்சே! நீ இப்படியே இருந்தால் மீளாத் துயரக் கடலில் விழப்போவது உறுதி. அப்படி நீ விழாமல் இருக்க வேண்டுமானால் ஒரே வழிதான் உண்டு. உன் பழைய இயல்பை விட்டுவிட்டு, இத்துயரக் கடலில் வீழாமல் காப்பவரை ஏத்துவாயாக’ என்று முடிக்கின்றார்.

திருச்சதகத்தில் மூன்றாவதாக அமைந்துள்ள பத்துப் பாடல்களுக்கும் சுட்டறுத்தல்’ என்ற தலைப்புத் தரப் பெற்றுள்ளது. அது எவ்வளவு தூரம் பொருந்தும் என்பதைச் சிந்திப்பது நலம். இந்தத் தலைப்பை