பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


மறந்துவிட்டுப் பாடல்களுக்குள் நுழைந்தால், மேலைப் பாடல்களோடு இவற்றுக்குள்ள தொடர்பு நன்கு விளங்கும்.

சென்ற பாடலில் ‘அவலக்கடலில் வீழாமல் காப்பவனை ஏத்த வேண்டும்’ என்று நெஞ்சுக்கு அறிவுரை கூறினார் அல்லவா? எப்படி ஏத்த வேண்டும்? என்ற வினாவிற்கு விடை கூறுவதுபோல அமைந்துள்ளன இப்பாடல்கள்.

‘வெள்ளந்தாழ் விரிசடையாய்” என்று ஏத்தத் தொடங்கினால் உள்ளந்தாள் நின்றுச்சியளவும் நெஞ்சாய் உருக வேண்டும். உடம்பெல்லாங் கண்ணாய் வெள்ளம் பாய வேண்டும்.

இவ்வாறு நடைபெறாமல் செய்வது நம்முடைய வினையின் கோளாறு என்று வருந்துகிறார் அடிகளார். அவ்வினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆற்றல் கொண்டவன் இறைவன் என்பதை 'வினைக்கேடன்' என்ற சொல்லால் அறிவிக்கின்றார்.

அந்த வினைக்கேடன் தம்மிடம் வந்து தம் வினையைப் போக்கத் தம்பால் என்ன தகுதி இருக்கிறது என்பதை நினைக்கத் தொடங்கி, தகுதி ஒரு சிறிதும் இல்லாத நாய்போன்றவனாகிய தம்மிடத்து வினைக்கேடன் வந்தது, அவன் கருணையால் என்று குறிப்பிடுகின்றார்.

அவன் கருணையினால் ஆட்கொண்ட பிறகுதான், நாம, ரூபம் கடந்து எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் அவன் என்பதை அவரால் உணரமுடிந்தது. ஆனாலும், என்ன புதுமை? நாம, ரூபம் கடந்த அப்பொருள் தம் எதிரே வந்து, 'வண்ணங் காட்டி, வடிவு காட்டி, மலர்க்கழல்கள் அவை காட்டி' ஆட்கொண்டது என்கிறார்.

வண்ணம், வடிவு, மலர்க்கழல்கள் என்பவற்றைப் புறத்தே காட்டிய அப்பொருள், உள்ளே புகுந்தது. அதன்