பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


உள்ளவா வந்து தோன்றினாய்’ (46) என்றும் பாட முடிந்தது.

அடுத்து வரும் ஐம்பத்தைந்து முதல் அறுபத்து நான்கு வரை உள்ள பாடல்கள் இறையநுபவத்தில் மூழ்க முடியாமல், தடையாக நிற்கும் தம் உடலை விட வேண்டும் என்ற குறிப்பில் பாடப்பெற்றவை ஆகும். இப்பத்தில் ஏழாவது பாடல் (6) மறுபடியும் பாலுணர்வு பற்றியே பாடுகிறது. இந்த உடம்பு இருக்கின்றவரையில் பாலுணர்வுப் பிரச்சினை தீராது என்று அடிகளார் நினைத்திருக்க வேண்டும். எனவேதான், உடலை ஒழிக்க வேண்டும் எனப்பாடும் இத்தொகுப்பினுள் இப்பாடல் இடம் பெறுகின்றது.

அறுபத்தைந்து முதல் எழுபத்து நான்கு வரை உள்ள பத்துப் பாடல்களும் ஒரு புதிய திருப்பமாக அமைந்து உள்ளன. திருப்பெருந்துறை அநுபவத்திலிருந்து விடுபட்ட நிலையில், மீண்டும் அதனைப் பெறவேண்டும் என்ற துடிப்பும், அதனைப் பெறுவதற்கு இவ்வுடம்பு தடையாக உள்ளது என்ற ஏக்கமும் முன்னர் உள்ள அறுபது பாடல்களில் பேசப்பெற்றதைக் கண்டோம். இந்தப் பத்துப் பாடல்களும் போற்றி போற்றி என்று முடிதலின், ஏதோ ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கின்றன. இறையநுபவத்தைத் தரும் குருவின் திருவடியை இனி எப்பொழுது காண்பது என்று வருந்திய அடிகளாருக்கு இப்பொழுது அது கிடைத்திருக்க வேண்டும். இவ்வாறு கூறுவதால் மறுபடியும் குருவடிவில் வந்து ஆட்கொண்டான் என்பது பொருளன்று. முதன் முறையாகக் குருவைக் கண்டபொழுது எந்த அநுபவம் சித்தித்ததோ அந்த அனுபவம் மீட்டும் இங்கே சித்தித்திருக்க வேண்டும். அதனாலேயே போற்றி போற்றி என்று பாடல்கள் போற்றி செய்கின்றன.