பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 349


விடாது. இது கருதியே வள்ளுவப் பேராசான், மனத்திடை உள்ள பற்றுக்கள் நீங்கவேண்டுமாயின், பற்றற்றானைப் பற்றுக என்று கூறிப்போனார். இக்கருத்தைத்தான் அடிகளார் இப்பாடலின் இரண்டாவது அடியில் விவரிக்கின்றார். ‘ஏக! நின் கழல் இணை அலாது (வேறு பற்று) இலேன்’, என்று கூறுவதால் கழல்களாகிய பற்றுக்கோட்டை இறுகப் பற்றிக்கொண்டார் என்பது தெரிகிறது. வேறு பற்று இலேன் என்பதால் ஆசா பாசங்கள் காரணமாக வரும் பற்றை அறவே துறந்து, கழற் பற்று ஒன்றையே ஆதாரமாகக் கொண்டுள்ளார் என்ற கருத்தையே இந்த அடி விளக்குகின்றது. இந்தக் கழற் பற்று உறுதிப்பட, அந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் முறையில் உள்ளம் நைதல், கைகள் தலைமேல் ஏறுதல், கண்ணிர் ஆறாகப் பெருகுதல் ஆகிய மெய்ப்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை மூன்று, நான்காம் அடிகள் அறிவிக்கின்றன.

மெய் கலந்த அன்பு என்றால், சத்தியமானதூய்மையான வேறு கலப்பில்லாத முழுத்தன்மை பெற்ற அன்பு என்பதே பொருளாகும்.

இதையல்லாமல், இந்தத் தொடருக்கு மற்றொரு குறிப்புப் பொருளையும் கூறலாம். மனத்தளவில் நின்றுவிடும் அன்பு ஒரு வகை. அது பெரும்பாலும் புறத்தே வெளிப்படுவதில்லை; உடம்பில் எவ்வித மாறுபாட்டையும் செய்வதில்லை. மனம் விரும்பிய பொருளிடத்துச் செலுத்தப்படும் அன்பாகும் இது.

மனம், அடிமனம், மேல் சித்தம் என்பவற்றைக் கடந்து சித்தத்தின் அடிப்பகுதியில் தோன்றும் அன்பு, தான் இருப்பதை உடம்பின்மூலம் வெளிப்படுத்தியே தீரும். சித்தத்தில் தோன்றும் அன்பு, உள்ளம் நையவும், தலைமேல் கைகள் ஏறவும், கண்ணீர் ஆறாகப் பெருகவும் செய்துவிடும். உடம்போடு தொடர்புடைய, மேலே கண்ட