பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


மாமனிதர்களுக்கும் இது பொருந்தும் என்று கூறுவது அடாதசெயல் என்று சிலர் கருதலாம். இம்மாமனிதர்களின் வாழ்க்கையைக்கூட அறிவு கொண்டு ஆராய்தலில் தவறொன்றுமில்லை. அவ்வாறு ஆராய்வதால்தான் நாமும் அவர்களைப் பின்பற்றி முன்னேறலாம் என்ற நம்பிக்கை மனித சமுதாயத்துக்குப் பிறக்கிறது. நால்வர் பெருமக்களில் திருஞானசம்பந்தர் தவிர ஏனைய மூவரையும் இவ்வாறு ஆராய்வதில் தவறொன்றுமில்லை. ஏன் திருஞான சம்பந்தரைமட்டும் விட்டுவிடவேண்டும்? திருஞான சம்பந்தர் ஏனை மூவரைப் போலப் பிறப்பெடுத்துச் சிலவற்றைச் செய்து, வீடுபேற்றை அடைய வேண்டிய நிலையிலில்லை. 'துறக்குமா சொலப்படாய்' (திருமுறை: 2-98-5) என்ற பாடலில் வரும் 'திருந்தடி மறக்குமாறு இலாத எனை இம் மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்’ என வரும் பிள்ளையாரின் திருவாக்கும், இலம்பையங்கோட்டுர்த் தேவாரத்தில் ‘எனதுரை தனதுரை’ என்ற திருவாக்கும், அவர் மூவரினும் வேறுபட்டவர் என்பதனை அறிவுறுத்தும். எல்லாவற்றையும் கடந்து இறைவன் திருவடி நிழலில் இருக்கும் சில ஜீவன்முக்தர்கள் அவ்வப்பொழுது குறிப்பிட்ட செயலை நிறைவேற்ற உலகிற்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களுள் ஒருவர் திருஞானசம்பந்தர். இந்த நுணுக்கத்தைச் சேக்கிழாருக்குப் பிறகு யாரும் தெரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ‘நால்வர் நான்மணிமாலை' ஆசிரியர் உள்பட யாரும் இதனைத் தெரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளற்பெருமான்மட்டும் இதற்கு விலக்காவார். நால்வரைப்பற்றியும் பாமாலை சூட்டிய வள்ளலார் திருஞானசம்பதரிடம் வரும்பொழுது தம்மை. மறந்து, 'ஞானசம்பந்த குருவே’ என்று பாடத் தொடங்குகின்றார்.

மணிவாசகப் பெருமானைப் பொறுத்தமட்டில் திருச்சதகம் அநுபவ ஏற்ற இறக்கத்தை அப்படியே