பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 355


படம்பிடித்துக் காட்டும் பகுதியாகும். இறையநுபவம் விட்டுப் போனதற்குத் தம்மாட்டுள்ள குறைகளே காரணம் என்று கருதித் தம்மைப் பொய்யன் என்று கூறிக்கொள்ளும் அடிகளார், கடைசிப் பகுதியில் குறைகளை நினைந்து அழுதால் அவன் அருளைப் பெறலாம் என்ற நம்பிக்கையோடு திருச்சதகத்தை முடிக்கின்றார்.

நீத்தல் விண்ணப்பம்

விண்ணப்பம் என்ற சொல் ஆறாம் நூற்றாண்டிலேயே நாவரசர் பெருமானால் பயன்படுத்தப்பெற்ற சொல்லாகும். ‘பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்’ (திருமுறை: 4-109-1) என்பது அவருடைய திருவாக்கு. விண்ணப்பம் என்பது உயர்ந்தோரிடத்துத் தாழ்ந்தோர் தங்கள் வேண்டுகோளை அறிவிக்கும் செயலாகும். வேண்டுகோள் என்று சொல்வதைவிட விண்ணப்பம் என்ற சொல் சற்று அழுத்தமுடையதாகும். ஒருவரிடம் வேண்டுகோள் விடுத்தால் அவர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் விண்ணப்பம், அவருடைய கவனத்தை ஈர்க்கும் முறையில் செய்யப்படுவதாகும்.

நீத்தல் விண்ணப்பம் என்பது நீத்தலைப்பற்றிய வேண்டுகோள். அப்படியானால் 'நீத்தல்’ என்ற செயல் எங்கே வந்தது? குருவாக வந்தவர் தம்மைவிட்டு மறைந்ததே, தம்மை அவர் நீத்த செயலாகும் என்று கருதினார் அடிகளார்.

ஒருவரை மற்றவர் விட்டு நீங்கிச் சென்றால் (நீத்தல்) அதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும். ஒன்று, தம் துணை தேவையில்லை என்ற நிலையில் நீத்துச் செல்வார்கள். இரண்டாவது, இனி இவருடன் இருந்து எவ்விதப் பயனும் இல்லை; ஆகவே, நாம் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் நீத்துச் செல்வதாகும்.