பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 357



நீத்தல் விண்ணப்பத்தின் முதல் பாடல் சற்று ஆழ்ந்து சிந்திப்பதற்குரியது. தம்மைப் பொய்யன் என்றும் பெருங்குற்றங்கள் உடையவன் என்றும் அருளைப் பெறத் தகுதியற்றவன் என்றும் இதுவரை கூறிவந்த அடிகளார், இப்போது மற்றொரு புதிய கருத்தைப் பேசுகிறார். இவருக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்று பார்த்துப் பெருந்துறையான் ஆட்கொள்ளவில்லை. தமது தகுதியின்மை, தமக்கே தெரியும்பொழுது பெருந்துறை நாயகனுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? அப்படி இருந்தும் வழியோடு சென்ற தம்மை வலிந்து ஆட்கொண்டான் என்றால், அதற்குக் காரணம், அவனுடைய கருணை என்பது நன்கு விளங்கும். தகுதிபற்றி ஆராயாமல் கருணை ஒன்றையே காரணமாகக் கொண்டு ஆண்டுகொண்டான் என்றால் அந்தக் கருணை வற்றிவிடக் காரணம் இல்லையே! மனித உணர்ச்சிகளைப்போல இறைவனுடைய கருணை, ஏறி இறங்கும் தன்மை உடையதல்லவே! அது என்றும் ஒருபடித்தாக உள்ளதன்றோ!

இவற்றையெல்லாம் மனத்திற் கொண்ட அடிகளார், ‘கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டு கொண்ட விடையவனே!’ (திருவாச:105) என்று விளிக்கின்றார். இப்படி விளித்திட்ட பிறகு 'விட்டிடுதி கண்டாய்' என்று சொன்னால், அது அவன் கருணையைக் குறை கூறியதாக முடியுமே; என்றும் ஒருபடித்தாக உள்ள அந்தக் கருணை-தகுதிபற்றி ஆராயாமல் ஆண்டுகொண்ட அந்தக் கருணை இப்பொழுது விட்டுவிடும் என்று நினைப்பதே தவறல்லவா?

அப்படியிருக்க, விட்டிடுதி கண்டாய் என்று அடிகளார் கூறுவது எப்படிப் பொருந்தும்? இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு இப்பாடலின் இறுதி அடியில் அடிகளார் பயன்படுத்திய ஒரு தொடரை நன்கு மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். எம்பிரான்! தளர்ந்தேன்