பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


புகழைப் பாடிப் பரவுகின்றனர். இறைவனோ இவர்களில் பலர் காட்சிக்கு அப்பாற்பட்டவனாக, உமை ஒரு கூறனாகத் திகழ்கின்றான். ஆனாலும், தேவர்களோ வேதமோ மெய்யடியார்களோ அத்திருவடிகளை முழுமை யாகக் கண்டதில்லை.

'கண்ணால் யானும் கண்டேன் காண்க' (திருவாச:3.58) என்று அடிகளாரே கூறியுள்ளமையின் இப்பாடலின் முடிவில் 'மெய்யடியார்கள் காண்பாரோ' என்று கூறி உள்ளது சிந்திக்கத் தக்கது. காணுதல் என்ற சொல் கட்புலனால் காண்பதையும், அறிவின் துணைகொண்டு ஆய்ந்து காண்பதையும் குறிக்கின்ற சொல்லாகும். கண்ணால் ஒரு பொருளைக் கண்டுவிட்டால் உடனே அதன் இயல்பு முழுவதையும் அறிந்துவிட முடியாது. இக்கருத்தை வலியுறுத்திப் 'பூதங்கள் தோறும்' என்று தொடங்கும் திருப்பாடலில் 'கேட்டு அறியோம் நினைக் கண்டு அறிவாரை' (திருவாச:372) என்று அடிகளார் பாடியுள்ளமை நோக்கத்தக்கது.

'கண்டறிவாரை' (கேட்டு அறியோம்) என்று ஒருசொல் நீர்மைத்தாய்ப் பொருள் கொண்டால் 'கண்ணால் யானும் கண்டேன் காண்க' என்பதனோடு மாறுபடும். இறை வடிவை ஊனக் கண்களாலும் கண்ட மகான்கள் பலர் உண்டு. ஆனால் அவர்கள் கண்டார்களேதவிர அவன் இயல்பை யாரும் முழுதாக அறியவில்லை. காரணம், இறைவனே 'தம் பெருமை தான் அறியாத் தன்மையன்' (திருவாச 274) ஆதலால், அவனுடைய இயல்பை அவனால் படைக்கப்பட்ட ஏனைய உயிர்கள், எத்துணை உயர்ந்த நிலையை அடைந்திருப்பினும், அறிதல் இயலாத காரியம். எனவேதான் கண்டு, அறிவாரைக் கேட்டு அறியோம் என்று பாடினார் அடிகளார்.