பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 359


வேண்டுகோளாக அது வெளிப்படுகிறது. கைகொடுக்க வேண்டியவன் முன்னே நிற்கின்றான். தன் எதிரே இருப்பவனை அஞ்சாதே என்று சொல்லி அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு மனத்திற்குத் தென்பைத் தருகின்றான்.

இந்தச் செயலில் கைகொடுப்பவனின் உதவி ஐம்பது சதவிகிதம் என்றால் கை கொடுக்கப்பட்டவன் ஐம்பது சதவிகிதம் தென்புடையவனாக இருத்தல் வேண்டும். ‘விடுதி கண்டாய்' என்று சொல்கின்றவரையில் இந்த அடிப்படைதான் பேசப்பெறுகிறது.

பாடலின் நான்காவது அடியில் இந்த நிலை மாறி விடுகிறது. கைகொடுக்கப்பட்டவனிடம் இருக்கவேண்டிய தென்பு முற்றிலுமாக அழிந்துவிடுகிறது. இப்பொழுது எதிரே இருப்பவன், கையைமட்டும் கொடுத்துப் பயன் இல்லை. கொடுத்த கையைப் பற்றிக் கொள்ளும் ஆற்றல்கூட இவனிடம் இல்லை. அந்த நிலையைத்தான் 'தளர்ந்தேன்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

தளர்ந்து விழப்போகும் ஒருவனை, மற்றவன் பின்னே வந்து இரண்டு கைகளாலும் தாங்கிக்கொள்ள வேண்டுமே தவிர, முன்னே நின்று ஒரு கையை நீட்டிப் பயன் இல்லை. இந்த நுண்ணிய கருத்தைத்தான் தளர்ந்தேன், என்னைத் தாங்கிக் கொள்ளே என்று குறிப்பிடுகிறார்.

இத்தொடரில் மற்றொரு பொருளும் அமைந்திருக்கக் காணலாம். விழுகின்றவனுக்குத் தன்னிச்சை, தன்செயல் என்ற இரண்டும் இல்லை என்பதும் பின்னே இருந்து தாங்குகின்றவனிடம் முழுவதும் அடைக்கலம் ஆகி விட்டான் என்ற பொருளும் தொனிக்கின்றதல்லவா?

அடிகளார். தளர்ந்தேன், என்னைத் தாங்கிக்கொள்ளே என்று கூறும்போது தம்மை முழுவதுமாகத் தலைவனிடம் ஒப்படைத்துவிட்டார் என்ற கருத்தும் பெறப்படுகிறது