பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அல்லவா? இதன் விரிவுரையாகத்தான் ‘அன்றே என்தன் ஆவியும் உடலும்' (திருவாச:500) என்ற பாடலும் பின்னர் வெளிப்படுகிறது.

தம்மைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று இறைவனை அழைக்கும் அடிகளார், 'சடையவனே' என்ற சொல்லை அற்புதமாகப் பயன் படுத்துகிறார். இறைவனைக் குறிக்க ஆயிரக்கணக்கான சொற்கள் இருக்க, சடையவனே என்று ஏன் சொல்ல வேண்டும்? அதற்கொரு காரணம் உண்டு. தம்மைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பம் செய்யும்பொழுது கீழே விழும் எதனையும் தாங்கிக் கொள்ளும் அநுபவம் ஏற்கெனவே அவனுக்கு உண்டு என்பதை அறிவிக்கவே, இந்தக் கருத்துடை விளிச் சொல்லைப் பயன்படுத்துகிறார். மேலிருந்து விழும் கங்கையையே அநாயாசமாகத் தன் சடையில் தாங்கிக் கொண்டவன் அல்லவா அவன்? அகங்காரத்தோடு வந்த அவளையே தாங்கிக்கொள்ளும் அவன், தளர்ந்திருக்கும் அடியவராகிய தம்மைத் தாங்குதல் எளிதாகலின் 'தாங்கிக்கொள்ளே’ என்றார். ஆதலின், 'சடையவனே' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

தம் குறை தீர்க்கவேண்டும் என்று மிக்க பணிவோடு நீத்தல் விண்ணப்பத்தைத் தொடங்கினார் அடிகளார். ஒவ்வொரு பாடலிலும் விட்டுவிடாதே என்ற வேண்டுகோளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வருகிறார். மனம் உருகிப் பாடுகின்ற இவர் ஒருமுறை அல்லது இருமுறை சொன்னால் போதாதா? ஐம்பது பாடல்களிலும் இதைச் சொல்லவேண்டிய காரணம் என்ன ? நீத்தல் விண்ணப்பம் தொடங்கி, பல பாடல்களைப் பாடியபிறகும் தம்மை இறைவன் விட்டுவிட மாட்டான் என்ற நம்பிக்கை முழுவதுமாக வரவில்லை போலும், தம் குறை தீர்க்கவேண்டும் என்று கெஞ்சும் முறையில் பாடிக்கொண்டு வந்த அடிகளார், 152, 153 ஆம்