பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 361


பாடல்களில் கெஞ்சும் முறையை அடியோடு மாற்றி விட்டார். இந்த இரு பாடல்களும் இறைவனுக்கு எச்சரிக்கைவிடும் முறையில் அமைந்துள்ளன. நீ எனக்கு அருள் செய்யாவிட்டால் உலகத்தார் உன்னைக் கண்டு சிரிக்கும்படியாகச் செய்துவிடுவேன் என்ற பொருளில் இரண்டு பாடல்களைப் பாடுகிறார். இது சற்றுப் புதுமையான திருப்புமுனை ஆகும்.

தம்மை இறைவனின் அடிமை என்று மனம், மொழி மெய்களால் ஒப்படைத்துவிட்ட ஒருவர், தம்முடைய எஜமானனுக்கு எச்சரிக்கை விடுவது எவ்வாறு பொருந்தும்?

இறைவனுக்குத் தம்மை அடிமையாக்கிக்கொண்ட நாவரசர் பெருமான்கூட திருநாகைக் காரோணத் திருவிருத்தத்தில் பின்வருமாறு பாடுகிறார்:


வங்கமலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே
எங்கள் பெருமான் ஒர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர்
கங்கை சடையுள் கரந்தாய்! அக் கள்ளத்தைமெள்ள மெள்ள உமை
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே

(திருமுறை: 4-103-8,9)


அடக்கம், அமைதி என்பவற்றையே தம் வடிவாகக் கொண்ட நாவரசர் பெருமானுக்கு, இறைவனையே கேலி செய்யும் இந்தத் துணிவு எவ்வாறு வந்தது?

முழுதும் இறையடிமை பூண்ட நாவரசர், மணிவாசகர் ஆகிய இருவருமே இறைவனை எச்சரித்தும், கேலி செய்தும் பாடினார்கள் என்றால், தோழமை பூண்ட சுந்தரரைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ? கண்களை இழந்த நிலையில், சுந்தரர் மனம் மிகுதியும் நொந்து இறைவனைக் குறைகூறிப் பாடிய பாடல்கள் பலப்பலவாகும்.