பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஏத்துபவர் அருட்கடலில் மூழ்கி எதிரே உள்ள பொருளினை ஏத்தத் தொடங்கினால், சில விநாடிகளில் ஏத்துபவர் அங்கே இருக்கமாட்டார். அதுதான் உண்மையான ஏத்துதல். இவ்வாறில்லாமல் ஏத்துபவர், தம் தனித்தன்மையை மறவாமல், 'நான் ஏத்துகிறேன்’ என்ற தன்முனைப்போடு ஏத்தினால், சொற்கள் ஏத்துவதாக இருக்குமே தவிர 'நான்' என்ற ஆணவம் அழியாத காரணத்தால், அது உண்மையான ஏத்துதலாக இராது.

அடிகளாரைப் பொறுத்தவரை ‘தான்' என்பது முற்றும் அழியவில்லை என்பதைக் குறிப்பாக உணர்த்தவே ‘யான்' உன்னை ஏத்தினும் என்றார். இவ்வாறு பொருள் கொள்வது ஒன்று.

இந்த நுணுக்கத்தை நன்கு புரிந்துகொண்ட வள்ளற்பெருமான் திருவாசகத்தைப்பற்றிப் பாடும்போது நின் வாசகத்தை 'நான்' கலந்து பாடுங்கால் என்று பாடி அருளினார். இறைவனை ஏத்தினாலும் திருவாசகத்தைப் பாடினாலும் ‘நான்’ என்பது தனித்து நிற்காமல் அந்த ஏத்துதலிலும் பாடுதலிலும் கரைந்துவிட (கலந்து) வேண்டும் என்பதே கருத்தாகும்.

இக்கருத்தைக் 'கடுக்கன்' தியாகராஜ தேசிகர் தாம் பாடிய திருவேரகப் பதிக்கத்தில் 'ஒரு தரம் சரவணபவா’ என்று தொடங்கும் பாடலில் மிக நுணுக்கமாக வைத்துக் காட்டுகிறார். ‘பரிவாகவே அனந்தம் தரம் சரவணபவா என்று நான் சொல்லியும் எண்ணியது பலியாது இருப்பது ஏனோ? என்ற பகுதியில் அக்குற்றம் என்ன என்பதை விளக்குகிறார். பரிவாகச் சொல்லியது உண்மை; அனந்தந்தரம் சொல்லியதும் உண்மை; அது பலியாமல் போனதும் உண்மை. இது ஏன் என்பதற்குக் காரணம் ஒரு சொல்லில் சுட்டப்பெறுகிறது. 'நான் சொல்லியும்’ என்பதில் உள்ள ‘நான்’ என்ற சொல்தான். அக்குறையைச் சுட்டி நிற்கிறது.