பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 373


அறிந்திருப்பதாகக் கூறுகின்றனர். உறங்குகின்ற பெண் சாதாரண காலத்தில் தோழியருடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது பேசிய பேச்சு, அவள் அன்பின் ஆழத்தையும், அவளின் நெஞ்சு உரத்தையும், அவள் தன்னம்பிக்கையையும் எடுத்துக் காட்டுவதாய் அமைந்து உள்ளது. ‘மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்போல் அறிவோம்’ என்று கூறியதால் இவை விளங்குகின்றன. தனி ஒருத்தி தன்னைப்பற்றிப் பேசும் பொழுது, நான் என்று கூறாமல் தன்மைப் பன்மை வாய்பாட்டால் நாம் அறிவோம் என்று கூறியது ஏன்? மலைஇலக்காக உள்ள பொருளை அறிந்ததால் ஏற்பட்ட உள்ளப் பெருமிதத்தின் விளைவாக வெளிப்பட்ட சொற்களாகும் இவை.

‘நாம்போல் அறிவோம்’ என்ற தொடரில் போல் என்பதை அசைநிலையாக்கி நாம் அறிவோம் என்றே பலரும் பொருள் கூறியுள்ளனர். அவ்வாறு கொள்ளாமல் போல் என்பதற்குப் போன்றவர்கள் என்று பொருள் கூறினாலும் தவறில்லை. அப்படிப் பொருள் கொள்ளும் போது நாம்போல்’ என்பதற்கு நம்போன்றவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மேலே கூறிய மூன்று பகுதிகள் உறங்குகின்றவளின் உள்ளக் கிடக்கையையும் அவள் பேச்சுத் திறனையும் எந்நேரமும் இறையன்பில் ஊறித் திளைப்பவள் என்பதையும் நன்கு விளக்கக் காணலாம்.

அப்படிப்பட்ட ஒருத்தி இப்பொழுது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றாள். வாயிலில் நின்று தோழிமார் உரக்கப் பாடி எழுப்பினாலும் எழுந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அவளுடைய உறக்கம் ஏனையோர் உறக்கம் போலச் சோம்பல் காரணமாக விளைந்ததாகத் தெரியவில்லை. அதன் எதிராகத் திருவெம்பாவையின் முதற்