பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்பது தெளிவாகத் தெரியவில்லை. பெண்களாதலின் அவர்கள் மனத்தில் இயல்பாகத் தோன்றும் சில விருப்பங்களைப் பிறர் அறிய இறைவனிடம் வெளிப்படையாகக் கூறிடும் மனத்திடம் அவர்கள்பால் இல்லை போலும். அதனால்தான் சமாதிநிலை கலைந்துவந்த ஒருத்தி தம் தோழிமார்களின் உள்ளத்தில் வேர்விட்டு முளைத் திருக்கும் ஆசைகளுக்கு வடிவு கொடுக்கும் முறையில் அவர்களையும் உளப்படுத்திக்கொண்டு இறைவனிடம் அவர்கள் சார்பாகப் பின்வருமாறு வேண்டுகிறாள்:

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம்; ஆங்கு அவர்க்கே
பாங்கு ஆவோம்;
அன்னவரே எம் கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்

(திருவாச. 163)

என்ற இப்பாடற்பகுதி அனைவரும் சேர்ந்து பாடியது போலக் காணப்படினும் சமாதிநிலை கலைந்து வந்தவளின் சொற்களாகவே அமைந்துள்ளது. இவ்வாறு நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ‘உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்’ என்ற இரண்டும் இம்மகளிரின் செயற்பாடுகள் ஆகும். அவர்கள் மன உறுதி காரணமாகப் பணிவோம், பாங்காவோம் என்று கூறியது நியாயமானதே ஆகும்.

ஆனால், ‘அன்னவரே எம் கணவர் ஆவார்’ என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்வது சரி, வரப்போகும் கணவன் எத்தகையவனாக இருக்கவேண்டும் என்று சொல்லி அத்தகையவனைத் தந்தருள்க என்று கேட்பதும் சராசரி மகளிருக்குப் பொருந்துவதே ஆகும். அதை விட்டுவிட்டு அன்னவரே எம் கணவர் ஆவார் என்று