பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


தொடங்கியதால் இப்பொறுப்புக்கள் நம்மை வந்து சூழ்ந்து கொள்கின்றன.

இவ்வாறு செய்யாமல் முழுத்தகுதி வாய்ந்த ஓட்டுநர் ஒருவரிடம் ஒட்டும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் பின்னேயுள்ள இருக்கையில் நாம் சாய்ந்து படுத்துக் கொண்டால், மேலே கூறிய பொறுப்புக்கள் அனைத்தும் நம் மனத்தைவிட்டு அகன்றுவிடுகின்றன; அமைதியாக உறங்கக்கூடச் செய்யலாம். இந்தக் கருத்துத்தான் இப்பாடலில் பேசப்பெறுகிறது.

‘உன்னைப் பிரானாகப் (தலைவனாக) பெற்ற உன் சீரடியோம்’ என்பதில் நம்மைத் தோற்றுவித்து வாழவும், வளரவும் வழிசெய்து கடைசிவரை உடனிருந்து நடத்துபவன் இறைவன் என்பது பேசப்பெற்றது. அவன் காலம், இடம் என்பவற்றைக் கடந்தவன்; ஆதலால், நமக்கு எதனை எப்பொழுது வழங்கவேண்டும் என்பதை அறிந்து வழங்குபவன் ஆவான். ஆனால், அவன் பருப் பொருளாக எதிரே தோன்றுவதில்லை. தேவை ஏற்படும் பொழுது நம் கைகளால் அவனைப் பற்றிக்கொள்ளும் வாய்ப்பேயில்லை. என்றாலும், அவனே தலைவன் என்பதை அறிந்து கொண்டால் நம்முடைய கவலைகளும் பொறுப்புகளும் பெரும்பகுதி நீங்கிவிடும். தேவை ஏற்படும்பொழுது, இவ்வுடம்பால், பற்றிக்கொள்ள ஒருவர் தேவை. அதற்காகவே கணவன்மார் வேண்டுமென்று இம்மகளிர் விரும்புகின்றனர். சிறந்த கணவர்கள் வாய்க்கும்போது எஞ்சியுள்ள பொறுப்பும் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இக்கணவன்மார் எத்தகையவர்? இறைவனிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் போக, எஞ்சியவற்றை இவர்களிடம் ஒப்படைக்கவேண்டுமானால், இவர்கள் அந்த இறைவனுடன் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். அவர்கள் அத்தகையவர்கள் என்பதை