பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


வந்தவர்கள்தாம் ‘என்ன குறையும் இலோம்’ என்று சொல்லமுடியும்.

இந்தத் தலைவி இப்பொழுது தோழிமார்களை அழைத்துக்கொண்டு குளத்திற்கு நீராடச் செல்கிறாள். இத்தலைவியுடன் சேர்ந்து அவள் சொற்களைக் கேட்டு, தோழிமார்களும் வளர்ச்சி அடைந்துவிட்டனர்.

இந்த வளர்ச்சியை, அடுத்து வரும் மூன்று பாடல்களும் (திருவாச: 164,165.166) அற்புதமாக விளக்குகின்றன. உன்னைப் பிரானாகப் பெற்ற அடியோம் என்று தலைவி கூறினாள் அல்லவா? யார் அந்தப் பிரான் என்ற வினாவைத் தோழிமார்கள் தலைவியிடம் எழுப்பியிருக்க வேண்டும். அதற்குத் தலைவி பதில் கூறுமுகமாக இதோ பேசுகிறாள்.

'தோழிகளே! யார் அந்தப் பிரான் என்று எளிதாகக் கேட்டுவிட்டீர்கள். இதற்கு நேரிடையாகப் பதில் கூறுவது கடினம். அண்ட பிண்ட சர அசரங்கள் ஆகிய அனைத்திலும், ஊடுருவியும் தனித்தும் நிற்கின்றான் அவன் என்று அஞ்சிவிட வேண்டா, ஓத உலவாத பெருமையுடையவன் ஆயினும், நமக்குத் தோழனாகவே எப்பொழுதும் உள்ளான். நம்போன்ற அடியவர்களிடையே எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கிறான் என்று கூறுவது தவிர அவனைப்பற்றிக் கூற வேறொன்றும் தெரியாது. இருபத்துநான்கு மணி நேரம் கோவிலில் தங்கி இருந்து இறைவனுடைய பணிகளைச் செய்துவரும் பிணாப் பிள்ளைகளை ஒருவேளை கேட்டுப்பார்க்கலாம். எது அவனுடைய ஊர்; அவன் பெயர் என்ன, அவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் யார் யார்-என்ற வினாக்களை எழுப்பியும் அவர்களாலும் ஒன்றும் விடைகூற முடியவில்லை’.