பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கடந்துநிற்கும் இறைவன் தன் எளிவந்த தன்மை (ஸெளலப்பியம்) காரணமாக இல்லங்கள்தோறும் எழுந்தருளி நம்மைக் கோதாட்டி ஆட்கொள்கிறான் என்று நினைக்கின்ற வரையில் அந்த வளர்ச்சி தொடர்கின்றது.

ஆனாலும், மனித மனத்தின் இயல்பான குறைபாடு இங்கே புகுந்துவிடுகிறது; பழைய உறுதிப்பாடு தளர்ந்து விடுகிறது. அதன் பயனாக மனம் பேதலிக்கின்றது. சராசரி மனிதர்களைப்போல மனம் வேலைசெய்யத் தொடங்கியவுடன் உள்ளே தனித்தியங்கும் உறுதி விழித்துக்கொண்டு மனத்திற்குக் கட்டளையிடத் தொடங்குகிறது. அந்தக் கட்டளை எதிர்மறைமுகமாக அமைகின்றது. ‘காணற்க, செய்யற்க' என்ற எதிர்மறை ஏவல்கள் உறுதியால் பிறப்பிக்கப்படுகின்றன. இப்படி உறுதியால் ஏவப்பெற்ற பொறி, புலன்கள், மனம் என்பவை இந்த ஏவலுக்குக் கீழ்ப்படியுமா என்ற ஐயம் தோன்றிவிடுகிறது. தன் அதிகாரத்தைச் செலுத்த ஒரு துணை தேவைப்படுகிறது. தன்னுடைய செல்வாக்குக் குறைந்திருந்தாலும் துணையின் செல்வாக்கைக் கண்டு பொறி புலன்கள் அஞ்சி நிற்கும் என்று அப்பெருமாட்டி கருதுகின்றாள்.

அப்பெருமாட்டி தேடிய துணைதான் இறைவன். அப்பெருமானிடம் இதனைச் செய்தருள்க என்று நேரடியர்கக் கூறாமல், 'எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்’ (173) என்று தன் விண்ணப்பத்தை அத்தலைவி வைக்கின்றாள். இதனைக் கேட்பாயாக என்று தலைவனிடம் கூறியபிறகு, இல்லங்கள்தோறும் எழுந்தருளிக் கோதாட்டும் தம் பெருமானின் திருவருள் கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையில் 'எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’, ‘எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க’, ‘எம் கண் மற்றொன்றும் காணற்க’ என்று கட்டளையிடுகிறாள்.