பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 51


ஒரு விநாடியில் போக்கினார்; போக்கி, ஆட்கொண்டார். இந்த அளவோடு நில்லாமல் குருநாதர் மற்றொன்றும் செய்தார். அன்பு கூர, அகம் நெக, அமுதம் ஊற உள்ளே புகுந்து ஆட்கொண்டார். அதாவது அன்புகர்தல், அகம் நெகுதல், அமுதம் ஊறுதல் ஆகிய வினைகள் அனைத்தும் குருநாதர் உள்ளே புகுந்த அந்த விநாடியே ஒருசேர நிகழ்வதாயின.

34.
தேவர் கோ அறியாத தேவ தேவன்
செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான்
யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவன் அடியார் அடியாரோடு
மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே 30

தேவர்கோ-இந்திரன். பொழில்-உலகம். மூவர்-பிரம விஷ்ணு ருத்திரர். பயந்து-பெற்று. மூவர்கோனாய் நிற்றல்-மூவர்க்குந் தலைவனாக நிற்றல். யாவர்கோன்-யாவர்க்கும் கோன் என முற்றும்மையும் குவ்வுருபும் விரிக்க.

மூவர்க்கும் முதல்வனாக நின்ற இறைவன் தம்மைக் குருவாக வந்து ஆட்கொண்ட பின்னர் அடிகளார் பெற்ற பல்வேறு பேறுகளுள் தலையாய பேறு ஒன்று இங்கே பேசப்பெறுகிறது.

‘யாமார்க்கும் குடியல்லோம்' என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசுகின்ற பெருமித நிலை இறையருள் பெற்ற அடியார்களுக்குமட்டுமே உரியதாகும். அந்த நிலை அடிகளாருக்கு வந்துவிட்டது என்பதை இப்பாடல் அறிவிக்கின்றது.