பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அன்பும் உள்ளத்தில் உருக்கமும் நிறைந்துள்ளதா என்றால், அதுவும் இல்லை.

'செயலற்றுப்போன பிணமாகிய நெஞ்சே மேலே கூறிய எதனையும் செய்யாமல் தனியே நிற்கின்ற உன்னை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்?' என்கிறார்.

இப்பாடலில் இறையனுபவத்தில் மூழ்கி நின்று வெளிப்பட்டவர்களின் மூன்று நிலைகள் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கூறப்பெற்றுள்ளன.

முற்றிலும் அனுபவத்தில் மூழ்கிய நிலையில் மனம், மொழி, மெய் ஆகிய கருவி, கரணங்கள் அனைத்தும் செயல் இழந்துவிடுகின்றன என்று கூறியவுடன் ஆழ் மயக்க நிலை (coma state) என்று நினைத்துவிட வேண்டா. மேலே கூறிய அனைத்தும் தத்தமக்கு உரிய நிலையில் அனுபவம் வேறு, தாம் வேறாக இல்லாமல் ஒன்றியிருந்துவிடும் நிலை அதுவாகும். இந்த முற்றனுபவமே (சமாதிநிலை) முதல்நிலை எனப்படும்.

வெள்ளம் வடிவதுபோல் இந்த இறையனுபவம் வடியவடிய மேலே கூறிய கருவி, கரணம் முதலியவை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவத்திலிருந்து விடுபடுகின்றன. விடுபட்ட அவை தத்தமக்குரிய பணிகளைத் தொடங்குவதன் முன்னர், தம்மை மறந்தும் மறவாமலும் கூத்து ஆடுதல், பாடுதல், கண்ணீர் பெருக்குதல், வீழ்ந்து புரளுதல் முதலிய செயல்களில் ஈடுபடுகின்றன. இறைப் பிரேமையில் நடைபெறுகின்ற செயல்களாகும் இவை. இந்த இறைப்பிரேமையே இரண்டாவது நிலை எனப்படும்.

பின்னர் இந்த அனுபவ நிலையிலிருந்தும், இறைப் பிரேமை நிலையிலிருந்தும் விடுபட்டுக் கருவி கரணங்கள் தத்தமக்குரிய இயல்பான பணிகளில் ஈடுபடுகின்றன. அந்த நிலையில் மனம்மட்டும் இரண்டாம் நிலையில் 'குறிப்பிடப்-