பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஆண்டு என்ற சொற்களை அடிகளார் பயன்படுத்தியதன் உட்கருத்தை அறிதல் வேண்டும்.

'அறிவதை அருளி நெறியெலாம் புலமாக்கிய எந்தை' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். மெய்யறிவை அருளியதோடு நின்றுவிட்டிருந்தால் அவர் குருவாக இருந்திருப்பாரேதவிரத் தந்தையின் பணியைச் செய்தவராக இருந்திருக்கமாட்டார். ஆனால், பெருந்துறைக் குரு மெய்யறிவை அருளியதோடு நின்றுவிடாமல், இனிச் செல்லவேண்டிய வழிகளையும் புலப்படுத்தினார் என்க. ‘நெறியெலாம் புலமாக்கிய' என்ற தொடர் மெய்யறிவின் துணைகொண்டு இனிச் செல்லவேண்டிய நெறிகளை யெல்லாம் படிப்படியாக அறிவித்தார் என்று கூறுகின்றது. ஆதலின், அவ்வாறு செய்தவரை ‘எந்தை’ என்று கூறுகின்றார்.

‘பந்தனை அறுப்பானை’ முதல் 'நெஞ்சே' வரை ஒரு தொடராக எடுத்துக்கொண்டால், பின்வருமாறு பொருள் கொள்ளலாம். பந்தங்களை அறுக்கின்றவனைப் பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும் என்று கூறும் பகுதி கழிவிரக்கத்தின் உச்ச கட்டமாகும்.

யாருடைய இன்னருளைப் பெற்றிருந்ததாகக் கூறுகிறார்? அவரோ பந்தங்களை அறுப்பவர். பந்தங்கள் அறுபடாதவரையில் அவரை அணுகமுடியாது. பந்தங்கள் நம்மால் அறுக்கப்படக்கூடியவை அல்ல. அவர் ஒருவரே பந்தங்களை அறுக்கக்கூடியவர். அப்படிப்பட்ட ஒருவருடைய அருளைப் பெறுவது எளிதான காரியமன்று.

நல் ஊழ் வசத்தால் ஒரோவழி அந்த அருளைப் பெற்றுப் பின்னர் அது விட்டு நீங்கிற்று என்ற நிலை இல்லாமல் ஒரு கணமும் அவரை விட்டுப் பிரியாத நிலைமை தரப்பெற்றமையின் அந்த அருளை ‘இன்னருள்கள்’ என்றார்.