பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


செய்பவனாகவும் உள்ளான். தாங்கள் தேவர்கள் என்ற தன்முனைப்போடு அவனை ஆராய முற்பட்டதால் அவர்கட்கு அரியனாயினான். அடியவர் என்றாலே முனைப்பு அற்றவர் என்பது பொருளாதலின் அவர்கட்கு எளியனாயினான் என்க.

“மனமே உன்னை அவன் ஆட்கொள்கின்ற அந்த நேரத்தில் உன்பால் எத்தனையோ குற்றங்கள் மலிந்து இருந்தன. அவற்றை அறுத்து உன்னை மன்னித்து அவன் ஆட்கொண்டான் என்பதை நீ நினைக்க வில்லையா? நினைத்திருந்தால் உள்ளத்திலுள்ள அறுவகைக் குற்றங்கள் என்ற குப்பைகளையெல்லாம் போக்கி அந்த உள்ளத்தில் அவன் வந்து தங்குவதற்குரிய துய்மையான சிறந்த இடமாக நீ செய்திருக்கவேண்டும். அங்ஙனம் செய்தாய் இல்லை என்கிறார்.

இதே கருத்தைப் பட்டினத்துப்பிள்ளையார் திருக் கழுமலமும்மணிக்கோவையில் பின்வருமாறு பேசுவதைக் காணலாம்.

கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என்சிந்தைப்
பாழறை உனக்குப் பள்ளியறை ஆக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந் தவிசு
எந்தை நீ இருக்க இட்டனன்.....
(திருக்கழுமல- கோவை 4-10-13)

‘பரகதி புக நீ விரும்பியிருப்பின் குற்றங்களை அறுத்துப் போக்குபவன் திருவடிகளை ஒயாது நினைத் திருக்க வேண்டும்’ என்கிறார். (பளகு-குற்றம்).

40. புகுவது ஆவதும் போதரவு இல்லதும்
பொன் நகர் புகப் போதற்கு
உகுவது ஆவதும் எந்தை எம்பிரான்
என்னை ஆண்டவன் கழற்கு அன்பு
நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு