பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


தூய்மையாக வரும்பொழுதே மண்ணை வாரித் தன் தலையில் போட்டுக் கொள்வது.

மாபெரும் உபகாரம் செய்த குருவிற்குத் தாம் நன்றி பாராட்டவில்லை ஆதலால் நன்றி கொல்லும் யானை யோடு உவமம் செய்தார்.

வழியோடு சென்ற தம்மை வலிய அழைத்து இறையனுபவத்தைக் குருநாதர் நெஞ்சில் நிறைவித்தார். பழைய, பசுகரணங்களைப் போக்கிப் பதிகரணங்களாக மாற்றி அருளினார். இது குளித்துவிட்டு வரும் யானைக்கு உவமை. இவ்வளவு பெரிய நலங்களை விட்டுவிட்டுப் பொறிகளின் இன்ப நுகர்ச்சியில் மறுபடியும் தம் மனம் செல்வது குளித்துவரும் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போலாகும். அதனாலேயே இருகை யானையை ஒத்திருந்து என்று பாடுகின்றார்.

என்னால் அறியாப் பதந் தந்தாய்
யான் அது அறியாதே கெட்டேன்

உன்னால் ஒன்றும் குறைவில்லை

(திருவாச. 644)

என்ற பாடலிலும் இதே கருத்துப் பேசப்பெற்றிருப்பதைக் காணலாம்

46.

உண்டு ஒர் ஒள்பொருள் என்று உணர்வார்க்கு எலாம்
பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை
தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்
கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே 42

உணர்வார்-தன்முனைப்பால் உணரத் தொடங்குகின்ற பாச பசு ஞானிகள். தொண்டனேற்கு-சிவஞானத்தைத் திருவருள் வாய்ப்பால் பெற்ற அடியேனுக்கு. கண் மாயம் என்ன- கண்ணைப் பற்றியிருக்கும் மயக்கம்தான் என்ன.