பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


பாடியுள்ளாரே, 'உள்ளவா வந்து தோன்றினாய்’ என்பதன் பொருளென்ன என்ற வினாவை எழுப்பினால், நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்பதுதான் விடையாகும். ‘உள்ளவா'று என்று அடிகளார் குறிப்பிட்டுக் கூறுவதால் அவருக்குக் கிடைத்த காட்சியில் பெண், ஆண், அலி என்று இனம்பிரிக்க முடியாத ஒரு பொருளாக இறைவன் காட்சி தந்திருக்க வேண்டும்.

'வந்து தோன்றினாய்’ என்று கூறுவதால், இது திருப்பெருந்துறை நிகழ்ச்சியையே சுட்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அங்கிருந்தது மானிட, ஆண் வடிவம்தானே? அந்த வடிவத்தைக் கண்டுவிட்டு உள்ளவா தோன்றினாய் என்று அவர் கூறிய சொற்களுக்கு, நாம் பொருள் கூறத் தொடங்கினால் சிக்கல் ஏற்பட்டுவிடும். கட்புலனுக்கு விருந்தாகவுள்ள குருவின் வடிவைப் பெண், ஆண், அலி அல்லன் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும் என்ற வினாவை எழுப்பினால் விடை கிடைத்துவிடும். குதிரையிலிருந்து இறங்குகின்றவரை, மானிட ஆண் வடிவில் இருந்த குருவை அடிகளார் கண்டது உண்மை. அவரிடம் சென்று தீட்சை பெற்றபிறகு அடிகளாருக்கு ஒரு காட்சி கிடைத்திருக்க வேண்டும். அக்காட்சியில் பெண், ஆண், அலி வடிவுகளையெல்லாம் கடந்த அப்பொருள் தன்னுடைய சிவ சொரூபத்தை அடிகளாருக்கு வழங்கியிருக்க வேண்டும். ‘உள்ளவா வந்து தோன்றினாய்’ எனபதன் பொருள் இதுவேயாகும்.

தோன்றிய அப்பரம்பொருள் கட்புலன் காணுமாறு தோன்றிற்றா அல்லது உள்ளத்து ஒளியாய் உள்ளே 'தோன்றிற்றா’ என்ற வினாவை எழுப்பினால், விடை கூறுவது கடினம். தோன்றினாய் என்ற சொல் கட்புலனுக்கு விருந்தாகவா அன்றி உள்ளத்து ஒளியாகவா என்று நம் மனத்திடைத் தோன்றும் வினாவிற்கு விடை கூறுவதுபோல நான்காம் அடியின் முதற்சொல் நிற்கின்றது. ‘கண்டும்’