பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


திருப்பெருந்துறை நிகழ்ச்சியை அடிகளார் மீண்டும் இங்கு நினைக்கின்றார். குருவின் எதிரே இருந்த அடியார்கள் அனைவரும் இவர் எதிரேயே குருவோடு சென்று மறைந்தனர். சென்றவர்கள் பொன்னகர் புக்கு அவர் திருவடி நீழலை அடைந்தனர்.

இரண்டாவது அடியில் உமையம்மையோடு வந்தருள என்ற தொடர் வருகிறது. குருமட்டும் இருந்தாராதலின் இறைவியோடு என்ற தொடருக்கு இறைவனது மறைந்து நிற்கும் அருட்சக்தி என்று பொருள் கூறுவர். அது ஏற்புடையதாகத் தெரியவில்லை. திருப்பெருந்துறையில் வாதவூரர் கண்ணில் முதலிற் பட்டது குருவின் திருவுருவே ஆகும். திருவாதவூரரைக் குருவினிடம் இழுத்துச் சென்றது அவரிடம் இருந்து புறப்பட்ட அருள் அலைகளே என்று முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். அந்த அருள் அலைகளால் ஈர்க்கப்பட்ட வாதவூரர் இறைவனுடைய தீட்சை பெற்ற பின்னர் அங்கே குருவடிவம் மறைந்து உமையோடு உடையனாகிய இறைவன் காட்சியளித்ததை ஊனக் கண்ணாலும் காண முடிந்தது. இதை முன்னருங் கூறியுள்ளார் (திருவா:3-64-86) இந்த நூல் வரிசையில் முதல் நூல் பக். 189 காண்க. ஆதலின் இறைவன், இறைவியோடும் அடியார்களோடும் பொன்னகர் புகுந்தான் என்று கூறுகின்றார். எனவே, இங்குக் கூறியது மறைந்து நிற்கும் அருட்சக்தியை அன்று; உமையொரு பாகனாகக் காட்சி அளித்த பெருமானையே குறிப்பிடுகிறார்.

பொதுவாக ஊரிலுள்ள மாடுகள் யாரேனும் ஒருவரைச் சார்ந்தே இருக்கும். (மாடு என்ற சொல் செல்வத்தையும் குறிப்பது) உரிமையாளர் இல்லாத மாடுகள் எங்கும் இரா. மாடுகளைக் குறிக்கும்போது இன்னாருடைய