பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 83


மாடுகள் என்று இன்றும் சொல்வதைக் கேட்கலாம். இதற்குப் புறனடை கோயில் மாடுகளே ஆகும். உரிமையாளருடைய மாடுகளைப்போலக் கோயில் மாடுகள் எங்கும் கட்டப்படுவது இல்லை. கோயில் மாடுகள் என்ற காரணத்தால் பலரும் உணவு தருவர் என்றாலும், கட்டுத்துறை இல்லாத காரணத்தால் கோயில் மாடுகள் ஊரைச் சுற்றி வரும். அதிலும் குருடாக இருக்கும் மாடு ஒதுங்கும் இடம் தெரியாமல் எங்கும் சுற்றிவரும். இதனையே கருத்துட் கொண்ட அடிகளார் ‘கண்கெட்ட ஊரேறாய் இங்கு உழல்வேனோ’ என்றார்.

58.

உலவாக் காலம் தவம் எய்தி
       உறுப்பும் வெறுத்து இங்கு உனைக் காண்பான்
பல மாமுனிவர் நனி வாட
        பாவியேனைப் பணி கொண்டாய்
மல மாக்குரம்பை இது மாய்க்க
       மாட்டேன் மணியே உனைக் காண்பான்
அலவாநிற்கும் அன்பு இலேன்
      என் கொண்டு எழுகேன் எம்மானே 54

உலவாக் காலம்-எல்லையற்ற காலம். அலவா-வருந்தி. குரம்பை-குடிசை.

‘இறைவா உனைக் காணவேண்டிக் காலமெல்லாம் தவஞ்செய்து உடம்பை உருக்கிக்கொள்பவர்கள் அப்படியே நிற்கின்றார்கள்.

‘இத்தகைய முயற்சியொன்றும் யான் செய்யவில்லை; உன்பால் அன்பும் இல்லை. அப்படியிருந்தும் எனைக் கூவிப் பணிகொண்டாய். உடனடியாக என் உடலை மாய்த்து உன்னோடு வந்திருக்க வேண்டும். அஃதொன்றும் செய்திலேன்’ என்கிறார்.