பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



முற்றத் துறந்த நிலையிலும், இறையருள் பெற்ற நிலையிலும்கூட, மனக்குரங்கு முழுவதுமாக அடங்கி விடுவதில்லை. ஒரோவழித் தலைகாட்டும் அதனை நினைந்து வருந்தி, இறைவனிடமே இக்குறையைப் போக்க வேண்டும் என்று அழுது வேண்டி, நற்பயன் பெற்றவர்கள் பலர்.

ஒரோவழி இப்பழைய நினைவுகளில் செல்லுகின்ற மனம், உடனடியாக அடக்கப்பட வில்லையானால் ஒருவனைப் படுகுழியில் தள்ளிவிடும் என்ற கருத்தை உணர்த்தவே 'கேடு என்றனக்கே சூழ்ந்தேனே’ என்று பாடியுள்ளார்.

இப்பாடலும் இதுபோன்ற கருத்துடைய சில பாடல்களும் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளன. இவை அடிகளாரின் மனத்தில் ஒரோவழித் தோன்றிய எண்ணங்களின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.

இவ்வாறு கூறுவதால் அடிகளாரின் உயர்வுக்கு இழுக்கு நேர்ந்துவிடும் என்று பலர் கருதினர் போலும்! நம்மிடம் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவதற்காகவே இக்குறைகள் தம்மாட்டு உள்ளது போல் அடிகளார் பாடியுள்ளார் என்று அவர்கள் கருதினர். இவற்றை ஏறட்டுக்கொண்டு பாடினாரே தவிர, இக்குறைகள் அவர்மாட்டு இருந்தன என்று நினைப்பதோ பேசுவதோ பெரும் தவறாகும் என்றே பலரும் கருதுகின்றனர்.

இவர்கள் நினைப்பதுபோல் எவ்விதக் குறைபாடும் இன்றிப் பண்பாட்டின் உறைவிடமாக இப்பெருமக்கள் இருந்திருப்பின் அவர்கள் வாழ்க்கையோ அன்றி அவர்கள் பாடல்களோ நமக்கு முன் மாதிரியாக அமைவது எளிதன்று. காரணம், அவற்றை ஓரளவு புரிந்துகொள்ளலாமே தவிர, பின்பற்றுவது மிகக் கடினம்.