பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 87


 இறைவனைப் போலக் குறைவிலா நிறைவாக இவர்கள் இருந்திருப்பின், இவர்கள் வாழ்க்கையை முன் உதாரணமாகக் கொண்டு நம் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை.

இதன் எதிராகச் சராசரி மனிதர்களாகக் குறைவு நிறைவுகளோடு இப்பெருமக்கள் வாழ்ந்தார்கள்; இப் பிறப்பிலேயே இறையருளை முழுவதுமாகப் பெற்றுவிட வேண்டும் என்ற குறிக்கோளை முன் வைத்துக் கொண்டார்கள். அதை அடைவதற்காகவே ஒயாமல் இறைவனை வேண்டினார்கள்; குறிப்பிட்ட நேரத்தில் பூசை செய்துவிட்டு மற்ற நேரங்களில் எல்லா வகைத் தவறுகளையும் செய்பவர்கள் போல் அல்லாமல் இவர்கள் மாறுபட்டவர்கள்.

தம் குறைகளையும் மனக் கோட்டங்களையும் இறைவனிடம் முறையிடுவதன் மூலம் இப்பிறப்பிலேயே தம் குறைகளைப் போக்கிக்கொண்டு உய்கதி அடைந்தவர்கள்; ஆதலால் இவர்கள் பாடல்கள் நம் மனத்தைத் தொட்டு இழுக்கின்றன. இப்பெருமக்கள் என்றோ ஒருமுறை, ஒரு விநாடிநேரம் மனத்தில் தோன்றிய கோட்டங்களுக்கு வடிவு கொடுத்துப் பாடினர். ஆகவேதான், இப்பெருமக்களுடைய வாழ்வும் வாக்கும் இன்றும் நமக்கு வழிகாட்டியாக அமைகின்றன; என்றும் இப்பணியை இப்பாடல்கள் செய்யும்.

நம்முடைய வாழ்வில் நிறைவு என்பது ஒரு மிகச் சிறிய பகுதி; குறைவு என்பது மிகப் பெரிய பகுதி. அடிகளார் போன்ற பெரியோர்கள் வாழ்க்கையில் நிறைவு என்பது மிகப் பெரிய பகுதி; குறைவு மிக மிகச் சிறிய பகுதி. என்றாலும் என்ன? நம்மிடம் சிறிதாக இருப்பது அவர்களிடம் பெரிதாக இருப்பினும் இருவர்கள் வாழ்க்கையிலும் இது பொதுத்தன்மை உடையதாகும். ஆதலால்