பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இவர்களை முன்மாதிரியாகவும் குறிக்கோளாகவும் வைத்துக்கொண்டு நாம் முன்னேற முடியும்.

இவர்களை முன்மாதிரியாக நாம் அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே, இறைவன் அடிகளார் போன்றவர்களைப் படைத்துள்ளான். பெரும் கல்வியாளராக வளர்ச்சி பெற்று, மாபெரும் பதவியில் அமர்ந்து, உலகியல் அனுபவங்களை முற்றிலுமாகப் பெற்றிருந்த இவர், திடீரென்று மாறி அனைத்தையும் துறந்து இறை அனுபவத்தில் திளைத்துத் திருவாசகம் பாடும் நிலையை அடைந்தார்.

எனவே, பிறந்தது முதல் கல்வி கற்றுப் பெரும் பதவியில் அமர்கின்றவரை அடிகளார் போன்றவர்களுக்கும் நம் போன்றவர்களுக்கும் ஒரு பொதுத்தன்மை இருப்பதை எளிதில் அறியலாம். இந்தப் பொதுத்தன்மையில் பங்கு கொண்ட நாம் அடுத்தபடியாக அவர்கள் சென்ற வழியில் ஏன் செல்லக்கூடாது? இந்த எண்ணத்துடன் வாழத் தொடங்கினால் அடிகளார் அடைந்த அந்தத் தன்னேரில்லாத் தன்மையை இப்பிறப்பில் அடைய முடியா விட்டாலும் அவ்வழியில் பல படிகள் முன்னேறலாம் அல்லவா? அவர்கள் நம் முன்மாதிரியாக அமைகின்றார்கள் என்று கூறுவதில் தடையென்ன?

இன்று நம்மில் பலர் அடிகளார் போன்றவர்களை நம்மில் வேறுபடுத்தி எங்கேயோ உயர்த்தி வைத்துவிட்டு, அவர்கள் அடைந்த நிலையை நாம் அடைய முடியாது; அப்படி நினைப்பது கூடப் பாவம் என்று பேசி வருகின்றனர்.

இப்படிப் பேசும் இவர்கள், அடிகளார் மூலமாகத் திருவாசகத்தை உலகிற்கு இறைவன் ஏன் தந்தான் என்ற வினாவிற்கு விடை கூற முடியாமல் விழிக்க நேரிடும்.

திருவாசகம் தோன்றியது நம்பிக்கையூட்டி, நம்மை வளர்ப்பதற்காகவே, நம்மை நம்பிக்கை இழக்கச்