பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ★ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

"அவர் சூடிக்கொடுத்த மாலையே காண் நறுமணம் மிக்கு நம் உள்ளத்துக்கு நனி உகப்பாவது" என்றருளிச் செய்தான்் இயல்பில் தூய இறைவன்

நீ என்னை ஆண்டாளோ

கண் விழித்த பெரியாழ்வார் கோதையை மலர்மேல் மங்கையோ என்று வியந்தார். அவள் திறத்து அளவிலா அன்பு பெருகியது. அவளைத் தழுவி "நீ என்னை ஆண்டாளோ!" என்று பாராட்டினார்.

அதுமுதல் கோதைக்கு ஆண்டாள், சூடிக்கொடுத்த சுடர்கொடி, நாச்சியார் என்ற திருப்பெயர்களும் நிலை பெற்றன.

பருவம் வளருந்தோறும் பண்பும் இறைப் பற்றும் உடன் வளர்ந்தன. கடல் வண்ணன் மேல் காதல் கரைபுரண்டது. இனி அவனைக் கணப்பொழுதும் பிரிந்திருக்க இயலாது என்ற அளவுக்கு ஆதுரம் பெருகியது. பண்ணொடு பாணி பாடும் பாடினிஆனாள்.

பருவப்பாவை

ஒரு கொள்கொம்பிலே சேர்க்க வேண்டிய பருவக் கொடியான ஆண்டாள், "மானிடவர்க் கென்று பேச்சுப் படில் வாழுகில்லேன்" என்னும் உறுதிப் பாடு உடையவர். ஆனார்.

ஆண்டாளின் ஆற்றாமை

கண்ணனை இதற்கு முன்பு அடைந்து கலந்துறவாடியவர் உண்டோ என்று ஆராய்ந்தாள். திருவாய்ப்பாடிப் பெண்கள் அவனை நுகர்ந்தார்கள். என்று அறிந்தாள். ஆனால் அது, முன் ஒரு காலத்தில் நடந்தது. "நாம் அக் காலத்தில் பிறக்கப் பெற்றிலோமே" என்று ஏங்கினாள்.

"இனி அவன் உலாவிப்போன அடிச்சுவடும் அவனும் ஆய்ச்சியரும் திளைத்த யமுனைப் பேராறும் அவன் எடுத்த கோவர்த்தனமும் கிடந்ததாகில், அவற்றைக் கண்டாகிலும் உயிர் வாழ்வோம்" என்று நினைத்து பார்த்தாள். அவ்விடங்களுக்குப் போகும் ஆற்றல் இல்லாமையாலே என் செய்வேன் என்று கலங்கினாள். "சனகன் திருமகளைப் போலே வில் என்று ஒர் அவதி பெற்றிலேன், நம்பின்னைப் பிராட்டியைப் போலே, ஏறுகள் என்று ஒர் அவதி பெற்றிலேன். என் செய்வேன்!" என்று நிலை தடுமாறினாள்.