பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

திருவிளையாடற்புராணம்


இறைவன் சித்தராக எழுந்தருளி அவள் வீட்டு விருந்தினராக வந்தார். நாளும் இளைத்து வருகிறாயே ஏன்? என்று கேட்டார்.

"சுந்தரனுக்கு ஒரு படிவம் அமைக்க வேண்டும் என்று கரு வைத்திருக்கிறேன். அதற்கு வேண்டிய பொன் என்னிடம் இல்லை. அது கிடைக்காமையால் ஏற்பட்ட ஏக்கம்" என்றாள்.

"அதனைப் போக்குவது என் கடமை; வீட்டில் உள்ள பித்தளை, செம்பு, ஈயப் பாத்திரங்களைக் கொண்டு வா" என்றார்.

அவளும் அவ்வாறே கொண்டு வந்து குவித்தாள். அவற்றின்மீது சித்தர் விபூதி தெளித்தார். இவற்றைப் புடம் இட்டு எடுத்துப்பார்; அவை உருகிப் பைம்பொன் ஆகும்" என்றார்.

அவளும் அவ்வாறு செய்வதாக விடை தந்தாள். விடையவனைச் சித்தர் எனவே நினைத்து அவர் அடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் பொன்னம்மாள் "தின்ன உணவு உண்டு; அருந்திச் செல்க" என்று வருந்தி அழைத்தாள்; அவர் கிடைத்தற்கு அரிய மருந்து என மறைந்து விட்டார்.

அவளும் அவர் சொன்னபடி வீட்டில் உள்ள எல்லாப் பாத்திரங்களையும் பொன்னாக மாற்றி இறைவடிவம் செய்து நிறை உள்ளத்தோடு வழிபட்டாள். அவ் விக் கிரகத்தைக் காதல் சிறுவனைப் போல் கட்டி அணைத்து முத்தமிட்டாள். அவள் நகக்குறி அதில் படிந்தது. தேரிலே வைத்து அதை ஊர்வலம் போகச் செய்து திருவிழாவும் எடுத்தாள்.