பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

திருவிளையாடற்புராணம்

மாற்றினார். கைலயங்கிரிக் காட்சிகளை அவன் மதுரையிலேயே காணமுடிந்தது அங்கே நடக்கும் பூசைகளையும் சிவ வழிபாடுகளையும் இங்கேயே கண்டான். பிறகு அவனுக்கே அந்தக் கற்பனையில் வாழ விருப்பம் இல்லாமல் போய்விட்டது. மறுபடியும் அவன் வேண்டுகோள்படி அம் மனக் காட்சியை இறைவன் மறைத்தருளினார்.

இந்தக் கதையில் ஒர் ஐயம் கேட்பவர்க்கு உண்டாயிற்று. அகத்தியர் இந்தக் கதையைத் தம் மாணவர்க்கு எடுத்து உரைத்தார்.

மதுரைத் திருத்தலத்தில் தீவினைகள் தீராவோ திருவிடை மருதூருக்கு அவனை அனுப்பி வைத்து அவன் பாவச் சுமையைக் கழிப்பித்தது ஏன் என்று கேட்டனர்.

சிவன் உறையும் தலங்கள் அனைத்தும் சீர்மை மிக்கன என்று அறிவுறுத்தற்கும், பாவச் சுமை இங்கேயே குறையும் என்றால் மதுரை நகரத்து மகாஜனங்கள் நிறையப் பாவம் செய்யத் தொடங்குவார்கள்; அதனால் எதையும் செய்யலாம் என்று துணிவார்கள்; அவர்களுக்கு அந்த எண்ணம் உண்டாகக் கூடாது என்பதற்கும் இறைவன் அவனைத்திருவிடை மருதூர்க்குத் திசைதிருப்பியது என்று அகத்தியர் விளக்கிக் கூறினார். 

41. விறகு விற்ற படலம்

வரகுணன் ஆட்சிக்காலம்; ஏமநாதன் என்னும் இசைக் கலைஞன் வருகை தந்தான். அரசவையில் அரசன் செவி குளிர யாழிசை வாசித்தான்; அதிமதுர இசை கேட்டு அவனைப் பாராட்டிப் பரிசும் வரிசையும் தந்து