பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விறகு விற்ற படலம்

115

அனுப்பினான்; அவனை அங்கே மதுரையில் தங்குவதற்கு வேண்டிய வசதிகளையும் அமைத்துத் தந்தான். சீடர்களும் சிறப்புப் பெற்றார்கள். அவர்களுக்கு உல்லாசமான வாழ்க்கை கிடைத்தது. அரசன் அவர்களுக்கு விருந்து வைத்து உபசரித்து மகிழ்ந்தான்.

அந்நியன் ஒருவன் என்றும் பாராது அவனை வரவேற்ற போதும் அவன் தன்னியல்பு கெட்டு நிலை கெட்டுச் செருக்கும் கொண்டான்; அரசன் தன்னை மதித்தது சம்பிரதாயம் பற்றி என்று கொள்ளாமல் தன்னைச் சரித்தர புருஷன் என்று நினைத்துக் கொண்டான்; அரசன் தன்னை மகிழ்வித்தது தனக்கு நிகராக இசை பாடுவார் இல்லாமையால் தான் என்று சிந்திக்கத் தொடங்கினான். மேலும் அதனைச் சிலரிடம் சொல்லித் திரிந்தான்.

இது மானப்பிரச்சனையாக உருவெடுத்தது. தன். நாட்டில் யாழிசையில் வல்ல பாணபத்திரனை அழைப்பித்து "நீ ஏமநாதனை யாழிசையில் வெல்ல முடியுமா?" என்று கேட்டான். "சோமநாதன் அருளும் தங்கள் ஆணையும் துணை செய்யின் அவனுக்கு இணையாகப் பாடி வெல்ல முடியும்" என்றான் பாணபத்திரன். மறுநாளே இசைப் போட்டிக்கு ஏற்பாடு ஆயிற்று.

வீடு சேரும் பாணபத்திரன் வீதிகளில் ஏமநாதனின் சீடர்கள் பாடுவதில் வல்லவராக அங்கங்கே பாடி மக்களைத் திரட்டுவதைப் பார்த்தான். அது கேட்டு உடல் வியர்த்தான். சீடர்களே இத்தகைய சீர்மை பெற்றிருக்கும் போது அவர்கள் குரு எத்தகையவனாக இருப்பானோ என்று அஞ்சினான். ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோம் என் செய்வது என்று கவலை கொண்டான்;