பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

திருவிளையாடற்புராணம்

அரசன் ஆணையையும் மீற முடியாது. அஞ்சி ஓடவும் முடியாது. என்ன செய்வது, நாதன் தான் தனக்குத் துணைசெய்ய வேண்டுமென்று வழியில் கோயிலுக்குச் சென்று ஓலமிட்டுத் தன்னை இக்கட்டிலிருந்து விடுவிக்குமாறு வேண்டினான். வீடு சேர்ந்தான்.

திக்கெட்டும் புகழ் படைத்த ஏம நாதன் இசை பாடி அவன் வெற்றி பெறுவதற்கு முன் இறைவன் அதே அச்சத்தை அவனுக்குத் தோற்றுவிக்க ஓர் உபாயம் மேற்கொண்டார். வயது முதிர்ந்த மூத்த யாக்கையோடு தலையில் விறகு சுமந்து வீதிதோறும் சென்று அந்த ஏமநாதன் வீட்டுத் திண்ணையில் சுமையை இறக்கி வைத்து இளைப்பாறி இன்னிசை பாடினார்; தேனினும் இனிய கானம் ஏமநாதன் காதில் வந்து துளைத்தது. தமிழும் குழைத்துப் பாடியதால் அது அமிழ்தம் என இசைத்தது. வெட்டியாள் யாரோ பாடுகிறான் என்று எட்டிப் பார்த்தான்; அது விறகு வெட்டி என்பதை அறிந்தான்.

கந்தல் துணியும், அழுக்குத் தலையும், நரை திரை கண்ட யாக்கையும், அழுக்கும் வியர்வையும் படிந்த மேனியும் உடைய அவன் நாதம் மட்டும் கீத ஒலியாகக் கேட்கிறதே என்று வியந்தான்.

"யார்?" என்று அவன் பேர் கேட்டான்.

இதுவரை யாரும் என்னை முழுவதும் அறிய மாட்டார்கள்" என்றார்.

"ஊர் பேர் சொல்ல வேண்டாம், இசை எங்குக் கற்றாய்? அதுவாவது சொல்" என்றான்.