பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

திருவிளையாடற் புராணம்

பாடிய இசை உலகம் எங்கும் நிறைந்து ஒலித்தது. இசை ஒலி எழுந்தபோது மரம் செடி கொடிகள் அசையவில்லை கடலும் ஒலி அடங்கியது; நதிகளும் தன் ஓட்டம் தணிந்தது; விஞ்சையரும் தலை குனிந்தனர்; தேவர்கள் கேட்டு அவ்உலகமே இன்பத்தில் அமிழ்ந்தது; ஏமநாதன் புளகித்துப் போனார்; உரோமம் சிலிர்த்தது; நெஞ்சும் நினைவும் இசை வெள்ளத்தில் முழுகியது; அதிலிருந்து கரை ஏற முடியாமல் தவித்தான். திண்ணையில் தூங்கிய விறகுச் சுமையாளன் விண்ணையும் கவரக்கூடிய இசை பாடினார். பின் அந்த இடத்தைவிட்டு மறைந்து தன் திரு உருவைக் கலைத்தான்.

உள்ளே சென்ற ஏமநாதன் அந்தச் சாதாரிப் பண்ணைப் பற்றிச்சிந்திக்கத் தொடங்கினான். தமிழ் மண் இசையோடு பிறந்தது; அதன் பண் ஈடு இணையற்றது. இதனைப் பாடியவன் சந்தனம் கமழும் மார்பும் பட்டு பீதாம்பரம் உடுத்திய படாடோபமும் உடையவன் அல்லன்; வயதில் மூத்து வாழ்க்கையின் கரை ஓரத்தில் ஒதுக்கப்பட்டவன்; யாரும் அக்கரை காட்டாதவன்; ஒதுக்கப்பட்டவனே இவ்வளவு சீரும் சிறப்புமாகப் பாடுகிறான் என்றால் அவன் ஆசிரியர் எவ்வளவு புலமை வாய்ந்தவனாக இருக்கமுடியும் பாணபத்திரன் சிந்திய சோற்றைத்தின்று வளர்ந்தவனே பத்தடி பாய்கின்றான் என்றால் அவனை வளர்த்தவன் நூறு அடி பாயாதிருக்க மாட்டான். சிறுத்தையே சீறுகிறது என்றால் அதைப் பெற்று ஆளாக்கிய புலி எப்படிப் பாயும் என்று அஞ்சினான். 'பாணபத்திரன்' அந்தப் பெயரே பாணிசை பாடுகிறது. சிங்கத்தின் குகையில் யானை வலிய தலையிட்டுக் கொள்வது போலத்தான் இருக்கிறது வலிய நாமே இசைப் போட்டியில் மாட்டிக் கொள்வது. 'வந்தோமா கொடுத்ததைப் பெற்றுக் கொண்டோமா என்று இல்லாமல்