பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

திருவிளையாடற்புராணம்


மறுநாள் அரசன் ஆணைப்படி பத்திரன் அரச அவைக்கு வந்தான். ஏமநாதனுக்கு ஆள் அனுப்பப் பட்டது. அவன் முகவரியே இல்லாமல் இரவோடு இரவாக அஞ்சி ஒடிவிட்டதை அறிந்தான். பாணப்பத்திரன் கனவில் வந்த இறைவ்ன் காட்சியையும் அவர் சொல்லிய உரை களையும் விடாமல் சொல்லித் திருவருளின் துணையை விளக்கினான்.

பாண்டியனும் இறைவன் காலடிகள் நோகக் கடும் வெய்யிலில் விறகுகளைச் சுமக்க வைத்ததற்காக வருந்தினான். அவர் வாயால் நாத இசை எழுந்து ஏமநாதன் புறங்கண்டது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பாணபத்திரனுக்குச் சிறப்புகள் செய்து பொன்னும் பொருளும் தந்து பாராட்டினான். அவனும் அவற்றைத் தக்க மாணாக்கர்களுக்குப் பகிர்ந்து அளித்துப் பரமன் அடி நினைத்து வாழ்ந்தான். 

42. திருமுகங் கொடுத்த படலம்

இறைவன் விறகு வெட்டியாக வந்து பாணபத்திரனுக்கு அருள் செய்தமையின் இறைவனையே பாடும் தொழிலை அவன் மேற்கொள்ளும்படி வரகுண பாண்டியன் அறிவுறுத்தினான். அதன்படி கோயிலுக்குச் சென்று முப்பொழுதும் அவன் புகழ் பாடுவதையே நியமமாகக் கொண்டான். அரசன் திருமுன் சென்று அவையில் பாடுவதை நிறுத்திக் கொண்டான். அதனால் வருவாய் இழந்தான்.

வருவாய் இன்மையால் வறுமை வந்து சேர்ந்தது. அவனுக்குப் பொருள் தந்து ஆதரிக்க இறைவன் திருவுளம் கொண்டார், அரசனின் பண்டாரத்தில் இருந்து ஆபரணங்களையும் பொருளையும் மணியையும் கொண்டு